கார், பைக்குகள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசு முடிவு
1 min read
Central government decides to reduce GST on cars, bikes
17/8/2025
பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில், “இந்த தீபாவளியில் மக்களுக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது; ஜிஎஸ்டி வரி விதிப்பில் அடுத்தகட்ட மாற்றங்களை இந்த தீபாவளிக்கு கொண்டு வர உள்ளோம்” என்று தெரிவித்தார்.
அக்டோபர் 20 தீபாவளி வருகிறது. முன்னதாக செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே இந்த கூட்டத்தில் மாற்றங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், கார் மற்றும் பைக்குகள் போன்ற வாகனங்கள் மீதான வரியைக் கணிசமாகக் குறைக்க ஒன்றிய அரசு முடிவு எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கார்கள், SUV-க்கள், மற்றும் இருசக்கர வாகனங்களை 18% ஜி.எஸ்.டி. வரியின் கீழ் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது கார்கள், இரு சக்கர வாகனங்கள் மீது 28% வரியும், SUV-க்கள் மீது 50% வரியும் இருப்பதால் அரசின் புதிய முடிவால் கார் மற்றும் பைக்குகளின் விலை கணிசமாகக் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் அடுத்த மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதில் இந்த வரி சீர்திருத்தம் குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
இரட்டை அடுக்கு ஜி.எஸ்.டி. குறித்து நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
“மிகக்குறைந்த வரியால் மக்களின் பையில் அதிக பணம் சேரும். இதன் மூலம் அதிக நுகர்வுக்கு வழி ஏற்படும். மத்திய அரசின் இந்த சீர்திருத்தம் சுமார் 6 மாதங்கள் மற்றும் பல்வேறு சந்திப்புகளில் விவாதிக்கப்பட்டு எடுக்கப்பட்டது. இந்த பரிந்துரையை மந்திரிகள் குழு ஏற்றுக்கொண்டு ஜி.எஸ்.டி. கவுன்சிலும் ஒப்புதல் அளித்தால் வரி விகிதங்களின் ஏற்ற இறக்கத்துக்கு முடிவு ஏற்படுவதுடன், நிலைத்தன்மை உறுதி செய்யப்படும்.
ஏழை, நடுத்தர மக்கள், விவசாயிகள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையை மனதில் வைத்து இந்த அடுத்த தலைமுறை ஜி.எஸ்.டி. பரிந்துரை வழங்கப்பட்டு உள்ளது. அத்துடன் தினசரி பயன்பாட்டு பொருட்களுக்கான வரி குறைவதை இது உறுதி செய்கிறது.
இந்த அமைப்பு அமலுக்கு வந்து, இந்தியா ஒரு வளர்ந்த நாடாகவும் மாறி விட்டால், ஒற்றை அடுக்கு ஜி.எஸ்.டி. குறித்து நாம் யோசிக்க முடியும். அந்தவகையில் 2047-க்குள் ஒற்றை அடுக்கு ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்படும். அடுத்த தலைமுறை ஜி.எஸ்.டி. ஒரு கேம் சேஞ்சராக இருக்கும். வருவாய் மற்றும் செலவினம் ஒரே சீராக இருக்கும் வளர்ந்த நாடுகளுக்கு ஒற்றை அடுக்கு ஜி.எஸ்.டி. ஏற்றது. எனவே ஒரு ஒற்றை அடுக்கு ஜி.எஸ்.டி. அமைப்பை உருவாக்குவதே உச்சபட்ச இலக்காகும். எனினும் அதற்கான நேரம் இதுவல்ல”
இவ்வாறு அவர் கூறினார்.