June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

பீகாரில் பாஜகவின் துரோக அரசியல் தோற்கப்போகிறது- மு.க.ஸ்டாலின் பேச்சு

1 min read

BJP’s treacherous politics is about to be defeated in Bihar – M.K. Stalin’s speech

27.8.2025

பீகாரில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் வாக்குகள் திருட முயற்சி நடப்பதாக நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தநிலையில் வாக்காளர் அதிகார யாத்திரை என்ற பெயரில், பீகாரில் ராகுல்காந்தி யாத்திரை நடத்தி வருகிறார். கடந்த 17-ந்தேதி சசாரம் நகரில் தொடங்கிய இந்த யாத்திரை 16 நாட்கள் நடைபெற்று பாட்னாவில் வருகிற 1-ந்தேதி நிறைவடைகிறது. இந்த யாத்திரை பேரணியை 1,300 கிலோ மீட்டருக்கு மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார். இந்த யாத்திரையில் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்-மந்திரிகள், இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்று வருகிறார்கள்.
இந்த நிலையில், பீகாரில், ராகுல்காந்தி நடத்தி வரும் பேரணியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். திறந்தவெளி வாகனத்தில் ராகுல் காந்தியுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணி சென்றார். இதைபோல கனிமொழி எம்.பி. பிரியங்கா காந்தி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ராகுல் காந்தி பேரணியில் கலந்து கொண்டனர்.
மு.க.ஸ்டாலின் புறப்பட்டு மதியம் 2 மணியளவில் தர்பங்கா விமான நிலையம் வந்தார். பின்னர் சிறப்பு விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

சமூகநீதி – மதச்சார்பின்மை ஆகியவற்றின் அடையாளமாக இருப்பவர் லாலு பிரசாத் யாதவ். தலைவர் கலைஞரும் லாலு பிரசாத்தும் மிக நெருக்கமான நண்பர்களாக இருந்தார்கள். எத்தனையோ வழக்குகள், மிரட்டல்கள் வந்தபோதும் பாஜகவுக்கு அஞ்சாமல் அரசியல் செய்ததன் காரணமாக இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் தலைவர்களில் ஒருவராக உயர்ந்து நிற்கிறார் லாலு பிரசாத்.

ராகுல் காந்தி, ஜேதஸ்வி யாதவ் செல்லும் இடமெல்லாம் மக்கள் கடலென திரண்டு வருகிறார்கள். ஜனநாயகத்தை காக்க, மக்கள் நலனுக்காக நீங்கள் ஒன்றிணைந்துள்ளீர்கள். உங்கள் இருவரின் நட்பு அரசியலைக் கடந்து உடன்பிறப்புகள் போன்றது. பீகார் தேர்தலில் உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரப்போவது இந்த நட்புதான்.

பீகாரில் பாஜகவின் துரோக அரசியல் தோற்கப்போகிறது. தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ் கூட்டணி வெற்றி உறுதியாகியுள்ளது; அதனால்தான் பாஜக தடுக்க முயற்சிக்கிறது. 65 லட்சம் வாக்காளர்களை சொந்த மண்ணின் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது பயங்கரவாதம் தவிர வேறு எதுவும் இல்லை. பீகாரில் வாக்காளர்களை நீக்கியது ஜனநாயக படுகொலை. சாவி கொடுத்தால் ஆடும் பொம்மைப்போல் தேர்தல் ஆணையம் ஆடுகிறது.

தேர்தல் ஆணையத்தின் வாக்குத் திருட்டு மோசடியை ராகுல் காந்தி அம்பலப்படுத்தியிருக்கிறார். ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கூறுகிறார்; தேர்தல் ஆணையத்தின் இந்த மிரட்டல்களுக்கு ராகுல் காந்தி பயப்படமாட்டார். ராகுலின் ஒரு குற்றச்சாட்டுக்கு கூட தேர்தல் ஆணையத்தால் பதில் சொல்ல முடியவில்லை. ராகுல் காந்தியின் வார்த்தையிலும், பார்வையிலும் எப்போதும் பயம் இருக்காது. இந்தியாவுக்கான வழக்கறிஞராக சகோதரர் ராகுல்காந்தி உள்ளார். உங்களால் இந்திய மக்களுக்கு நீதி கிடைக்கும்.

400 இடங்கள் என கனவு கண்ட பாஜகவை 240 இடங்களில் அடக்கியது இந்தியாகூட்டணிதான். மெஜாரிட்டி என ஆட்டம் போட்டவர்கள் மைனாரிட்டி ஆட்சி நடத்தி வருகின்றனர். மக்கள் சக்திக்கு முன் எந்த ஒரு சர்வாதிகாரியும் மண்டியிட்டுதான் ஆக வேண்டும் என்பதை பீகார் மக்கள் மீண்டும் ஒருமுறை நிரூபிக்க வேண்டும். மக்கள் சக்திக்கு முன் எந்த ஒரு சர்வாதிகாரியும் மண்டியிட்டுதான் ஆக வேண்டும் என்பதை பீகார் மக்கள் மீண்டும் ஒருமுறை நிரூபிக்க வேண்டும்.

கடந்த ஒரு மாத காலமாக இந்தியாவே பீகாரைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதுதான் ராகுல் காந்தியின் பலம் ஆகும். இதுதான் தேஜஸ்வியின் பலம் ஆகும். இந்தியாவின் ஜனநாயகத்துக்கு ஆபத்து வரும் போதெல்லாம் அதை எதிர்த்து பீகார் போர்க்குரலை எழுப்பியிருக்கிறது என்பதுதான் வரலாறு ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *