சங்கரன்கோவில் அருகே நீதிமன்ற ஊழியர் வீட்டில் நகை திருடிய உறவினர் கைது
1 min read
20 pounds of jewelry stolen from court employee’s house near Sankarankovil
14.9.2025
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே நீதிமன்ற ஊழியர் வீட்டில் 20 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்ப்டது. இது தொடர்பாக அவரது உறவினரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த சேர்ந்தமரம் அருகே உள்ள வீரசிகாமணியை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவர் நெல்லை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் தட்டச்சராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சங்கரன்கோ வில் நகராட்சி அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 10ம் தேதி காலை 7 மணிக்கு கல்யாணசுந்தரம் வீட்டிலிருந்து புறப்பட்டு நீதிமன்ற பணிக்கு சென்று விட்டார்.
இதையடுத்து அவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். இதன் பின்னர் மாலையில் வீடு திரும்பிய கல்யாண சுந்தரத்தின் மனைவி வீட்டை சுத்தம் செய்துள்ளார். அப்போது பீரோவில் வைத்திருந்த தங்க மோதிரம் ஒன்று கீழே கிடந்துள்ளது. இதைப் பார்த்து சந்தேகம் அடைந்த அவர் அறையில் இருக்கும் பீரோவை திறந்து பார்த்தார்.
ஆனால் அதில் இருந்த தங்க நெக்லஸ், வளையல் உள்ளிட்ட 20 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கணவர் கல்யாண சுந்தரத்திற்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார்.
அவர் உடனடியாக விரைந்து வந்து சேர்ந்தமரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் சேர்ந்தமரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆடிவேல் வழக்குப்பதிவு செய்து விசார ணையை தொடங்கினார். இதன் முதல் கட்ட விசாரணையில் சம்பவத்தன்று கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்ற பின்னர் அப்பகுதியில் யாரேனும் சுற்றி திரிந்தார்களா? என்பது தொடர்பாக அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து தொடர்ந்து அந்தப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் கல்யாண சுந்தரத்தின் தாய்மாமா மகன் அதே ஊரைச் சேர்ந்த சங்கர்(வயது 48) என்பவர் அந்த வீட்டுக்கு வந்து சென்றது தெரியவந்தது.
உடனடியாக போலீசார் அவரைப் பிடித்து நடத்திய விசாரணையில் நகைகளை திருடியதை சங்கர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் திருடிய நகைகளை அவர் சங்கரன்கோவில் அருகே உள்ள பாம்புகோவில் சந்தை பகுதியில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அங்கு சென்று நகைகளை போலீசார் மீட்டனர்.
அதனைத் தொடர்ந்து சங்கரை நீதிமன்றத்தில் நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைத்தனர். உறவினர் வீட்டில் நகைகளை திருடிய சங்கர் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.