சென்னை – நெல்லை வந்தே பாரத் ரெயிலில் கூடுதலாக 4 பெட்டிகள்
1 min read
Chennai – Nellai Vande Bharat train to have 4 additional coaches
16/9/2025
சென்னை – நெல்லை இடையே பகல் நேரத்தில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. நெல்லையில் இருந்து காலை 6.05 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மதியம் 1.50 சென்னை எழும்பூரை வந்தடைகிறது. மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் இரவு 10.40 மணிக்கு நெல்லையை சென்றடைகிறது. ஆரம்பத்தில் இந்த ரெயில் 8 பெட்டிகளுடன் இயக்கப்பட்டது. பயணிகளின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற நிலையில், கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டன. தற்போது, 16 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று வரும் 24-ந் தேதி முதல் மேலும் 4 பெட்டிகள், அதாவது 20 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட இருக்கிறது. இதனால், கூடுதலாக 312 பேர் பயணிக்க முடியும். இதன் மூலம் ஒரே நேரத்தில், 1,440 பயணிகள் வந்தே பாரத் ரெயிலில் செல்லலாம். இதில், 18 சேர் கார் பெட்டிகளும், 2 எக்சிகியூட்டிவ் சேர் கார் பெட்டிகளும் அடங்கும். மேற்கண்ட தகவலை தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.