எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் கூடுகிறது: அண்ணாமலை பேச்சு
1 min read
BJP central committee meeting in Mamallapuram; key leaders participate
16.9.2025
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற்ற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, பிரசாரம், தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இதனிடையே, தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பாஜக மையக்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
சிந்தனை அரங்கம் என்ற பெயரில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய மந்திரி எல்.முருகன், அண்ணாமலை, பாஜக மாநில பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், கரு.நாகராஜன், பாஜக மாநில துணைத்தலைவர்கள், செயலாளர்கள், பாஜகவில் உள்ள 7 அணிகளின் தலைவர்கள் உள்பட சுமார் 70 பேர் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலை, கூட்டணி, கூட்டணிக்குள் ஏற்படும் குழப்பங்கள், தேர்தல் வெற்றிக்கான வழிமுறைகள், கூட்டணியை வலுப்படுத்துவது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பாஜக தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
இந்தக் கூட்டத்தில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
அக்டோபர் முதல் தமிழகத்தின் அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொள்வார். மாவட்டந்தோறும் நிர்வாகிகள் சந்திப்பு, சமுதாய தலைவர்கள் சந்திப்பை நயினார் நாகேந்திரன் மேற்கொள்வார். நாள்தோறும் 3 இடங்களில் நயினார் நாகேந்திரன் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். தினசரி இரண்டு இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்து, 3-வது இடத்தில் பொதுக்கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசுவார்.
எடப்பாடி பழனிசாமியின் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணம் வெற்றிகரமாக நடைபெறுகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் கூடுகிறது. எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தில் பாஜக தொண்டர்கள் பங்கேற்று வருகின்றனர். அவர் பேச்சு பாஜகவைக் பாராட்டும் வகையில் உள்ளது. தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களுடன் இணைந்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. நேற்றைய கூட்டத்தில் “அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜக” என எடப்பாடி பழனிசாமி கூறியது முக்கியத்துவம் வாய்ந்தது.
இவ்வாறு அவர் பேசினார்.