August 28, 2026

Seithi Saral

Tamil News Channel

சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்கியது

1 min read

Tirupati Thirukkudai procession begins in Chennai

22.9.2025
திருப்பதி பிரம்மோற்சவ காலத்தில், ஏழுமலையான் கோவிலில் நடக்கும் கருட சேவையை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஹிந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட், திருமலை ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு 11 அழகிய வெண்பட்டு திருக்குடைகளை சென்னையில் இருந்து 5 நாட்கள் ஊர்வலமாக எடுத்து சென்று சமர்ப்பணம் செய்து வருகிறது. அவ்வகையில், 21-வது ஆண்டு திருப்பதி திருக்குடை ஊர்வலம் சென்னை பூக்கடை கேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் இன்று தொடங்கியது. உடுப்பி ஸ்ரீ பலிமார் மடம் பீடாதிபதி ஸ்ரீ வித்யாதீஷ தீர்த்தரு சுவாமிகள் ஆசியுரை வழங்கி திருக்குடைகள் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

தொடக்க விழா நிகழ்ச்சியில், ஹிந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் எஸ்.வேதாந்தம், அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி, விசுவ ஹிந்து வித்யா கேந்திரா பொதுச் செயலாளர் டாக்டர் கிரிஜா சேஷாத்திரி, தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிஷத் மாநில செயல் தலைவர் ஆர்.செல்லமுத்து (ஐ.ஏ.எஸ். ஓய்வு), பொதுச் செயலாளர் எஸ்.சோமசுந்தரம் ஆகியோர் பேசினார்கள்.

சென்ன சேகவ பெருமாள் கோவிலில் புறப்பட்ட திருக்குடை ஊர்வலம் என்.எஸ்.சி. போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து கொண்டிருக்கிறது. இன்று மாலை 4 மணிக்கு கவுனி தாண்டுகிறது.

சென்னையில் ஊர்வலம் செல்லும் பாதைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அப்பகுதியில் போக்குவரத்தும் மாற்றப்பட்டிருந்தன. தொடர்ந்து 5 நாட்கள் ஊர்வலமாக சென்று, 26-ந் தேதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 2 திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. மற்ற திருக்குடைகள், வஸ்திரம் மற்றும் மங்களப் பொருட்கள் 27-ந் தேதி சனிக்கிழமை மாலை திருமலையில், ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *