கோவில் திருவிழாக்கள் நிபந்தனை இன்றி நடத்த அனுமதி வழங்க வேண்டும்- முதல்வருக்கு கோரிக்கை
1 min read
Tenkasi MLA requests the Chief Minister to grant permission to hold temple festivals without conditions
2.10.2025
பொதுமக்களுக்கு நிபந்தனையின்றி கோவில் திருவிழாக்கள் நடத்த அனுமதி வழங்க காவல்துறைக்கு தமிழக முதலமைச்சர் உத்தர விட வேண்டும் என்று தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பழனி நாடார் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்தக் கோரிக்கை மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழக முதல்வராக தாங்கள் பொறுப்பேற்றது முதல் சுமார் 5000 கோடிக்கு மேல் மதிப்புள்ள கோவில் நிலங்களை தனியாரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. ஆயிரத்திற்கு மேற்பட்ட கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. இதெல்லாம் தங்கள் ஆட்சியின் சாதனைகளாக பொதுமக்கள் பாராட்டி மகிழ்கின்றனர்.
இந்நிலையில் தற்போது தென்காசி மாவட்டத்தில் கோவில் விழாக்கள் நடத்த காவல்துறையினர் 10 மணிக்கு மேல் அனுமதி வழங்குவதில்லை. கோவில் திருவிழா என்பது உழைக்கும் உழவன் மற்றும் தொழிலாளி வருடத்தில் இரண்டு நாட்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது.
ஆனால் காவல்துறையினர் இரவு 10 மணிக்கு மேல் திருவிழா நடத்த அனுமதிப்பதில்லை. வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் இரவு 9 மணிக்கு மேல் தான் கோவில்களுக்கு செல்வார்கள். கோவில் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி இருக்கும் நேரத்தில் நிகழ்ச்சியை நிறுத்தச் சொல்லி போலீசார் கட்டளையிடுவதால் பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே சலசலப்பு ஏற்படுகிறது. குறிப்பாக இரவு சினிமா காட்சிகள் அனுமதிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும் அனைத்து கடைகளும் திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் கோவில் திருவிழாக்கள் நடத்த அனுமதி இல்லையா? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். அப்போது காவல்துறையினர் ஆட்சியாளர்கள் மீது பழியை போடுவதால் ஆட்சிக்கு அவபெயர் ஏற்படுகிறது.
ஏற்கனவே கடந்த 07-08-2025 அன்று தமிழ்நாட்டில் கோவில் திருவிழாக்களுக்கு அனுமதி கோரிய விண்ணப்பங்கள் மீது, உரிய காலத்துக்குள் முடிவெடுக்காமல், ஏற்பாட்டாளர்களை நீதிமன்றத்தை நாடச் செய்யும் அதிகாரிகளுக்கு எதிராக, மாவட்ட எஸ்.பி.,க்கள் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரியே திருவிழா செலவுகளை ஏற்க வேண்டியது வரும்’ என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில் திருவிழாக்களில் இதே போன்ற அசாதாரண சூழ்நிலைகள் நிலவுகிறது. ஆதலால் தமிழக முதல்வர் உடனடியாக இந்தப் பிரச்சினைகள் தலையிட்டு நிபந்தனைகள் இன்றி கோவில் திருவிழாக்கள் நடத்துவதற்கு உரிய அனுமதியை காவல்துறையினர் உடனடியாக வழங்க தாங்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.