பைக் மீது டிராக்டர் மோதிய விபத்தில் முதியவர் பலி: கர்ப்பிணி பெண் படுகாயம்
1 min read
Elderly man dies in accident after tractor hits bike, pregnant woman seriously injured
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகேயுள்ள திருமங்களக்குறிச்சி தெற்கு தெருவில் வசித்து வந்தவர் வெங்கடாசலம் (வயது 60). இவர் கயத்தாறு-கழுகுமலை ரோடு ஓரத்தில் மோட்டார் வாகனங்களுக்கான பஞ்சர் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி காளியம்மாள். இவர்களுக்கு சிவன்பெருமாள், செந்தில்குமார் ஆகிய 2 மகன்களும், சுடலைவடிவு, மாதவி என்ற 2 மகள்களும் உள்ளனர்.
இதில் விவசாயியான சிவன்பெருமாள் மனைவி சரோஜினி(27). இவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் கடந்த 9ம் தேதி மாலை, சரோஜினி மாமனாரை வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக பைக்கில் பஞ்சர் கடைக்கு சென்றார். பின்னர் கடையை பூட்டிவிட்டு வெங்கடாசலம் மருமகளுடன் பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். பைக்கை சரோஜினி ஓட்டிச்செல்ல வெங்கடாசலம் பின்னால் அமர்ந்து சென்றார்.
கயத்தாறு-கழுகுமலை ரோட்டில் இருந்து திருமங்களக்குறிச்சி பிரிவு சந்திப்பு ரோட்டை கடப்பதற்கு முயன்றபோது வாகனங்கள் சென்றதால், பைக்கை நிறுத்தியுள்ளார். அப்போது பின்னால் வந்த டிராக்டர் திடீரென பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே வெங்கடாசலம் பரிதாபமாக உயிரிழந்தார். சரோஜினி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிராக்டர் டிரைவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.