June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை தீர்ப்பு

1 min read

Supreme Court to pronounce verdict in Karur stampede case tomorrow

12.10.2025
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த மாதம் (செப்டம்பர்) 27-ந் தேதி பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் நடத்தும் ‘ரோடு ஷோ’வுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க கோரி சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழுவை நியமித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா சார்பில் வக்கீல் யஷ் எஸ்.விஜய் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இதேபோல் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சிறுவன் பிருத்திக்கின் தந்தை பன்னீர்செல்வம், பாத்திமாபானுவின் கணவர் பிரபாகரன், சந்திராவின் கணவர் செல்வராஜ் ஆகியோரும் சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தனர். இதேபோல் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி பா.ஜ.க. வக்கீல் ஜி.எஸ்.மணியும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த அனைத்து மனுக்களையும் நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சரியா அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் விசாரித்தது. அப்போது தமிழக அரசு தரப்பிலும், விஜய் தரப்பிலும் காரசார வாதம் நடந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர். இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு நாளை (திங்கட்கிழமை) கூறுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *