கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது: அண்ணாமலை பேட்டி
1 min read
Happy to see Karur case transferred to CBI: Annamalai
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“கரூர் வழக்கு என்பது கட்சி சம்பந்தப்பட்டது அல்ல. 41 உயிர்கள் சம்பந்தப்பட்டது. கரூர் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதில் மகிழ்ச்சி. கரூர் சம்பவத்தில் சீமான் பதற்றப்படுவது ஏன்? எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஸ்டாலின் சிபிஐ விசாரணை கோரினார். திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் வழக்கை சிபிஐக்கு கொடுத்தார்கள். அரசியல் செய்வது நாங்களா இல்லை ஸ்டாலினா? யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீதிபதிகளைப் பற்றி நிறையும் சொல்லப் போவது இல்லை; குறையும் சொல்லப் போவது இல்லை. போலியாக மனு தாக்கல் செய்யப்பட்டதா என்பதை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்,”
சி.பிஐ விசாரணைக்கு வரவேற்பு தெரிவித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:-
அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்! கடந்த சில தினங்களுக்கு முன்பு 41 பேரைக் காவு வாங்கிய கரூர் துயரத்தின் பின்னணியை சிபிஐ தான் விசாரிக்க வேண்டுமென்ற நமது வலுவான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் வகையில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் கண்காணிப்பு குழுவையும் அமைத்துள்ள நமது சுப்ரீம் கோர்ட்டுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கரூர் சம்பவத்தில் தங்கள் மீது எந்தவிதத் தவறும் இல்லை என்பதை நிறுவ, எதிர்தரப்பினரைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தி தங்கள் இஷ்டத்திற்குக் கட்டுக்கதைகளைப் புனைந்து வந்த திமுக அரசின் அவசரத்திற்குப் பின்னால் ஏதோவொரு அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது என்ற மக்களின் சந்தேகத்திற்குக் கூடிய விரைவில் விடை கிடைக்கப் போகிறது. தங்களின் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்காக அப்பாவிப் பொதுமக்களைக் காவு வாங்கிய கயவர்கள் கருணையின்றி தண்டிக்கப்படுவார்கள்!