திருச்செந்தூரில் 2-வது நாளாக உள்வாங்கிய கடல்
1 min read
Sea level rises to around 100 feet in Tiruchendur for 2nd day
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் கடலில் புனித நீராடிவிட்டு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
பொதுவாக அமாவாசை, பவுர்ணமி மற்றும் அதற்கு முந்தைய, பிந்தைய நாட்கள், அஷ்டமி, நவமி போன்ற கனத்த நாட்களில் திருச்செந்தூரில் கடல் திடீரென உள்வாங்கும். இந்த நேரங்களில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதி உள்வாங்கி காணப்படும். அதன்படி நேற்று சுமார் 70 அடி தூரம் கடல் உள்வாங்கியது.
இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) அமாவாசை என்பதால் 2-வது நாளாக திருச்செந்தூர் கோவில் பகுதியில் சுமார் 100 அடி தூரம் கடல் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் கடலில் இருந்த பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. இருப்பினும் இது வழக்கமான சூழல் என்பதால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் எந்தவித அச்சமும் இன்றி கடலில் புனித நீராடிவிட்டு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.