தமிழகத்தில் 7 மாவட்டங்களில் நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு
1 min read
Very heavy rain likely in 7 districts of Tamil Nadu tomorrow
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தென்கிழக்கு அரபிக்கடலில் கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. நேற்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து இன்று தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது, மேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
இதன் காரணமாக நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமாரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
நாளை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இ டியும் இருக்கக்கூடும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.