June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

வாக்கு திருட்டு என ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது- தேர்தல் ஆணையம் விளக்கம்

1 min read

Rahul Gandhi’s allegation of vote rigging is baseless – Election Commission clarifies

5.11.2025
இந்தியாவில் பல்வேறு மாநில சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜ.க.வினர் வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளனர் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகிறார். முன்னதாக கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு தொகுதியில் நடந்த தேர்தலில் வாக்குகள் ஆன்லைன் மூலம் நீக்கப்பட்டு, பல்வேறு வாக்குகள் சேர்க்கப்பட்டு உள்ளதாக ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

அந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக மராட்டிய மாநிலத்திலும் வாக்கு திருட்டு நடைபெற்றதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்வைத்தார். அடுத்து நடைபெற உள்ள பீகார் தேர்தலிலும் வாக்கு திருட்டு விவகாரத்தை தேர்தல் பிரசாரத்தின் முக்கிய அம்சமாக ராகுல் காந்தி பேசி வருகிறார்.

இந்த நிலையில், போலி வாக்குகள் மூலம் அரியானா என்ற ஒரு மாநிலமே திருடப்பட்டுள்ளது என பரபரப்பு குற்றச்சாட்டை ராகுல் காந்தி கூறியுள்ளார். இது குறித்து டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பான ஆதாரங்களை ‘ஹெச் பைல்ஸ்’ (H Files) என்ற பெயரில் வெளியிட்டு ராகுல் காந்தி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,
“அரியானா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக மோசடி செய்யப்பட்டுள்ளது. அரியானாவில் 5.21 லட்சம் போலி வாக்காளர்கள், 93,174 செல்லாத வாக்காளர்கள் மற்றும் 19.26 லட்சம் மொத்த வாக்காளர்கள் மூலம் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளன.

அரியானாவில் வாக்குத் திருட்டு நடக்காமல் இருந்திருந்தால் காங்கிரஸ் அங்கு ஆட்சி அமைத்திருக்கும். வரலாற்றில் முதல்முறையாக தபால் வாக்குகளுக்கும், மின்னணு இயந்திர வாக்குகளுக்கும் தொடர்பே இல்லாமல் இருந்துள்ளது.

போலி வாக்குகள் மூலம் அரியானா என்ற ஒரு மாநிலமே திருடப்பட்டுள்ளது. பிரேசிலைச் சேர்ந்த மாடல் ஒருவரின் புகைப்படத்துடன் அரியானாவில் பல பெயர்களில் 22 வாக்குகள் பதிவாகியுள்ளன. இது தனிப்பட்ட தொகுதிகளில் மட்டும் இல்லாமல், மாநில அளவிலும், தேசிய அளவிலும் நடக்கிறது என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்”
இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிலையில், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு குறித்து தேர்தல் ஆணைய வட்டாரத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
“ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு தொடர்பான குற்றச்சாட்டு ஆதாரமற்றது. அரியானாவில் வாக்காளர் பட்டியல்களுக்கு எதிராக எந்த மேல்முறையீடுகளும் தாக்கல் செய்யப்படவில்லை.

வாக்குப்பதிவுகளை மேற்பார்வையிடவும், முறைகேடுகள் நடந்தால் அதை தெரியப்படுத்தவும் ஒவ்வொரு அரசியல் கட்சி சார்பிலும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்கப்படுகிறார்கள். பல பெயர்கள் விடுபட்டது குறித்து வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பூத் கமிட்டி உறுப்பினர்கள் யாரும் ஏன் கேள்வி எழுப்பவில்லை?”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *