கீழப்பாவூர்: ஊராட்சி மன்றத் தலைவர் உட்பட 3 பேர் மீது வன்கொடுமை வழக்கு பதிவு
1 min read
Keelappavur: A case of violence has been registered against 3 people, including the Panchayat President 6/11/2025
தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், குலசேகரப்பட்டி ஊராட்சியில் கல்வெட்டு உடைப்பு பிரச்சனையில் ஊராட்சி மன்றத் தலைவர் (பொறுப்பு) மற்றும் அவரது கணவர் உட்பட 3 பேர் மீது நீதிமன்றம் உத்தரவு படி பாவூர்சத்திரம் போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்
கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் குலசேகரப்பட்டி ஊராட்சியில் 2வது வார்டு உறுப்பினராக இருப்பவர் மாரியப்பன். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பெரும்பனையூர் விலக்கில் மத்திய நிதிக்குழு மானியம் மூலம் ஒரு லட்சம் கொள்ளவு கொண்ட குடிநீர் சம்ப்பின் பம்பு ரூம் மற்றும் கீழ சமுத்திரபுரம் பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி கட்டிடமும் கட்டப்பட்டு இவ்விரு கட்டிடத்திலும் கல்வெட்டு பதிக்கப்பட்டுள்ளது.
மேற்படி இரண்டு கல்வெட்டுகளிலும் வார்டு உறுப்பினர் என்ற அடிப்படையில் மாரியப்பன் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் குலசேகரப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் (பொறுப்பு) குறும்பலாப்பேரியை சேர்ந்த திருவளர் செல்வி தூண்டுதலின் பேரில் அவரது கணவர் சாமி ராஜா மற்றும் அவரது சகோதரர் சின்னத்துரை ஆகியோர் அந்த கல்வெட்டுகளை உடைத்து சேதப்படுத்தி விட்டனர். இதுகுறித்து மாரியப்பன் அவர்களிடம் கேட்டபோது அவரை சாதி பெயரை சொல்லி திட்டியதாக தெரிகிறது.
இதுகுறித்து மாரியப்பன் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். ஆனால் பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை.
உடனே மாரியப்பன் தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி வழக்கு தொடுத்தார். இதனையடுத்து தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் நீதிபதி பி.ராஜவேல், குலசேகரப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் (பொறுப்பு) திருவளர் செல்வி, அவரது கணவர் சாமிராஜா மற்றும் சகோதரர் சின்னத்துரை மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டனர்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் பாவூர்சத்திரம் போலீசார் மேற்கண்ட மூவர் மீதும் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.