கோவாவில் சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது
1 min read
International Film Festival begins in Goa
இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் உள்ள பன்ஜிமில் நேற்று தொடங்கியது. விழாவை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்து பேசியதாவது:-
இந்தியா உலகளாவிய திரைப்பட தயாரிப்பு மையமாக உருவெடுக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை. இந்த வேவ்ஸ் பிலிம் பஜார் நிகழ்வு படைப்பாளர்களுக்கும், திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும் இடையிலான பாலமாக திகழ்கிறது. இளம் படைப்பாளிகளையும், புதிய கதைகளை கொண்டுள்ளவர்களையும் ஆதரிப்பதற்கான தளமாக இது செயல்படுகிறது. இந்த ஆண்டு 124 புதிய படைப்பாளிகள் பங்கேற்று உள்ளனர். இந்திய கலாசாரத்தை உலகிற்கு எடுத்துச் செல்வதில் இது முக்கியப் பங்கு வகிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் கொரிய குடியரசின் தேசிய அவை உறுப்பினர் ஜேவோன் கிம் வந்தே மாதரம் பாடலை பாடியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. 50 ஆண்டுகளை கடந்த தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு நினைவுப்பரிசு அளித்து கவுரவிக்கப்பட்டது.
விழாவில் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் சஞ்சய் ஜாஜு, கூடுதல் செயலாளர் பிரபாத், விழா இயக்குனரும், தயாரிப்பாளருமான சேகர் கபூர், நடிகர் அனுபம் கெர், வேவ்ஸ் பஜாரின் ஆலோசகர் ஜெரோம் பைலார்ட், ஆஸ்திரேலிய திரைப்பட இயக்குனர் கார்த் டேவிஸ், தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனர் பிரகாஷ் மக்தூம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வருகிற 28-ந்தேதி வரை நடைபெறும் இவ்விழாவில், 81 நாடுகளைச் சேர்ந்த 240-க்கும் அதிகமான படங்கள் திரையிடப்பட உள்ளன. அதில் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’, அப்புக்குட்டியின் ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ மற்றும் இ.வி.கணேஷ்பாபு இயக்கி நடித்துள்ள ‘ஆநிரை’ என்ற குறும்படம் ஆகியவை இந்த விழாவில் திரையிடப்பட உள்ளன.
இந்தியத் திரைப்பட விழாக்களில் முதன்மையான இவ்விழாவில் நாட்டின் முக்கிய திரைக்கலைஞர்கள் கவுரவிக்கப்பட இருக்கிறார்கள். குறிப்பாக திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதால், நடிகர் ரஜினிக்கு இந்த கவுரவம் வழங்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இந்திய திரைப்பட விழாவில், மறைந்த திரைப்பட இயக்குனர்கள் குரு தத், ராஜ் கோஸ்லா, பானுமதி, ரித்விக் காதக், பூபென் ஹசாரிகா மற்றும் சலீல் சவுத்ரி ஆகியோரின் நூற்றாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன.