June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்

1 min read

Chief Minister M.K. Stalin chairs DMK MPs meeting

29.11.2025
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1-ந்தேதி தொடங்கி 19-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம், சனிக்கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். இதில், கழக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த சூழலில், தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடந்தது. இதில், 2 மாதங்களுக்கு ஒரு முறை எம்.பி.க்களிடம் இருந்து பெறப்படும் பணி அறிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. எம்.பி.க்களில் சிலர் மாவட்ட செயலாளர்களாகவும் உள்ளனர். இந்த கூட்டத்தில், எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்தும், எம்.பி.க்களின் செயல்பாடுகள் பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

வருகிற திங்கட்கிழமை நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் கோவை, மதுரை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு, எஸ்.ஐ.ஆர். உள்ளிட்ட விவகாரங்களை எழுப்புவது குறித்து தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது என்றும் கூறப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *