திருப்பரங்குன்றத்தில் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா கைது
1 min read
Nainar Nagendran, H. Raja arrested in Thiruparankundram
திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்திய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபத்தை இன்று மனுதாரர் ஏற்ற வேண்டும் இதற்கு மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். 144 தடை உத்தரவையும் நீக்கி உத்தரவிட்டு இருந்தார்.
இதனையடுத்து, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜகவினர் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் அங்கு கூடினர். அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 144 தடை உத்தரவு நீக்கத்தை ரத்து செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்து இருந்தனர். ஆனால், கலைந்து போக அவர்கள் மறுத்தனர். நயினார் நாகேந்திரனும் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனையடுத்து நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.அவரை தொடர்ந்து அங்கு வந்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவையும் போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் விளக்கேற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து திமுக அரசு பதிந்த மேல்முறையீட்டு மனுவைச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து நீதியை நிலைநாட்டியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
திமுக அரசு கடமையைச் செய்யத் தவறியதைச் சுட்டிக்காட்டியதோடு, ஏதோ ஒரு உள்நோக்கத்துடனேயே வழக்கைத் தொடர்ந்துள்ளது என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது தமிழர்களின் பண்பாட்டு உரிமையைப் பறிப்பதற்காகவே திமுக அரசு வழக்கு பதிந்துள்ளதை உறுதி செய்கிறது.
இன்று உயர்நீதிமன்றக் கிளையிடம் பெற்ற சவுக்கடி தீர்ப்புக்குப் பிறகாவது தனது ஹிந்து மத வெறுப்புணர்வை திமுக அரசு மூட்டை கட்டி வைக்க வேண்டும். ஆட்சிக் கட்டிலில் இருந்து மூட்டை முடிச்சுகளுடன் கிளம்ப வேண்டிய இறுதி கட்டத் தருணத்திலாவது ஹிந்து மக்களின் உணர்வுகளிலும் வழிபாட்டு உரிமையிலும் வீண் வம்புக்கு தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.