பாப்பாக்குடி அருகே ஊர் தலைவரை கொலை செய்த 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
1 min read
4 people sentenced to double life imprisonment for murdering village headman near Papakudi
தென்காசி மாவட்டம்,
பாப்பாக்குடி அருகே உள்ள காசிநாதபுரத்தில் கோவில் கொடை விழா நடத்துவதில் ஏற்பட்ட மோதலில் ஊர்தலைவரை கொலை செய்த 14 பேருக்கு ஆயள் தண்டனை விதித்து தென்காசி கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ்.மனோஜ்குமார் தீர்ப்பு கூறினார்.
தென்காசி மாவட்டம் பாப்பாக்குடி அருகேயுள்ள காசிநாதபுரத்தில் சீவலப்பேரி சுடலைமாடசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கொடை விழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு தரப்பினரின் ஊர் தலைவராக பிச்சையா நாடார் என்பவரது மகன் மணிவேல் இருந்துள்ளார். மற்றொரு தரப்பினரின் ஊர் தலைவராக புதுப்பட்டி சுப்பிரமணியன் மகன் விநாயகம் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 02.09.2015ம் தேதி அன்று இரவு 8.30 மணி அளவில் மணிவேல் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் அப்பகுதியில் உள்ள கற்குவேல் அய்யனார் கோவிலில் வழிபாடு நடத்த சென்றுள்ளனர்.
அப்போது அக்கோவிலுக்கு சென்ற விநாயகம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 17 பேர் இரும்பு கம்பி மற்றும் கம்பால் மணிவேலை தாக்கியுள்ளனர். இதனை தடுக்கச் சென்ற முத்துவேலுக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. மேலும் தப்பி ஓடி கோவில் கருவறைக்குள் மறைந்திருந்த சின்னத்தம்பி மகன் பிச்சையா துரத்திச் சென்ற அக்கும்பலைச் சேர்ந்தவர்கள் அவரை தாக்கி அங்கிருந்த சாமி சிலையையும் அடித்து உடைத்துள்ளனர். மேலும் அப்பகுதியில் நின்ற டிராக்டரும் அடித்து நொறுக்கப்பட்டது.
இதில் படுகாயம் அடைந்த மணிவேல், முத்துவேல் மற்றும் பிச்சையா ஆகியோர் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிவேல் பரிதாபமாக இறந்தார்.
இச்சம்பவம் குறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து, விநாயகம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சொள்ளமுத்து மகன் உலகநாதன், முத்துராஜ் மகன் சிவசுப்பிரமணியன், ஒளிவு மகன் சுடலை, புதுராஜா மகன் முத்துக்குமார், செல்லையா மகன் சுப்பிரமணியன், சுப்பிரமணியன் மகன் சந்தணம், கருப்பையா மகன் சிவன் சேட், பிச்சையா மகன் மாரிராஜ், காசிமணி நாடார் மகன் பிச்சையா, முத்துராஜ் மகன் வேல்துரை, சண்முகவேல் மகன் கருப்பையா, பண்டாரம் மகன் ரமேஷ், செல்லையா மகன் பண்டாரம், முருகன் (எ) பிச்சையா மகன் மணிவேல், நடராஜன் மகன் கலைவாணன், வெள்ளையா நாடார் மகன் முத்துராஜ் ஆகிய 17 பேர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கின் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த போதே முத்துக்குமார், பிச்சையா, முத்துராஜ் ஆகியோர் இறந்து விட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி எஸ்.மனோஜ் குமார் விநாயகம், உலகநாதன், சிவசுப்பிரமணியன், சுடலை, சுப்பிரமணியன், சந்தணம், சிவன்சேட், மாரிராஜ், வேல்துரை, கருப்பையா, ரமேஷ், பண்டாரம், மணிவேல், கலைவாணன் ஆகிய 14 பேர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ.41,000ம் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் ஓராண்டு சிறைத்தண்டனையும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் அரசு கூடுதல் வழக்கறிஞர் எஸ்.வேலுச்சாமி ஆஜரானார்