தென்காசி: 16 தேதிக்குள் விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர ஆட்சியர் அறிவுறுத்தல்
1 min read
Tenkasi: Collector instructs farmers to join crop insurance scheme by the 16th
தென்காசி மாவட்டத்தில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் வரும் டிசம்பர் 16ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இரப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் நடப்பு பிசானம் பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் சேர டிசம்பர் 16ம் தேதிக்குள் பிரிமியம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். ஒரு ஏக்கர் நெல் பயிரை காப்பீடு செய்ய விவசாயிகள் ரூ.540/-பிரிமியம் செலுத்த வேண்டும்.
இயற்கைச் சீற்றங்களினாலோ, பிற காரணங்களாலோ விவசாயிகளுக்கு மகசூல் இழப்போ, குறைபாடோ ஏற்பட்டால் நிதி இழப்பு ஏற்படாமல் விவசாயிகளை பாதுகாக்கும் நோக்கத்தோடு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புள்ளியியல் துறையால் வழங்கப்படும் எதேச்சை எண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட திடல்களில் மேற்கொள்ளப்படும் பயிர் அறுவடைப் பரிசோதனைகளின் சராசரி மகசூல் உத்தரவாத மகசூலைவிட குறைவாக இருந்தால் எவ்வளவு குறைவோ அதற்கு ஏற்ப கணக்கிட்டு உரிய இழப்பீட்டினை காப்பீட்டு நிறுவனம் வழங்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. 2025-2026-ம் ஆண்டில் தென்காசி மாவட்டத்தில் இத்திட்டம் பாரத ஸ்டேட் வங்கி பொதுக்காப்பீட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு தங்கள் பகுதியின் வேளாண்மைத்துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கடைசி நாள் வரை காத்திருக்காமல் விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கல் பெற்று டிசம்பர் 16-க்குள் பிசானம் பருவ நெல் பயிர்களை பயிர் காப்பீடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.