ராஜேந்திர சோழனின் காவிய காதல் (நாவல் விமர்சனம்)
1 min read
oplus_131106
A painting of love that does not distort history (book review)
9.12.2025
ராஜராஜசோழன் வரலாறும், ராஜேந்திர சோழன் வரலாறும் மகத்தானது. கடல்தாண்டி பலநாடுகளை வென்றவர்கள் இவர்கள் மட்டுமே. ஆனாலும் போரை விரும்பி சென்றதில்லை. இவர்கள் இருவரை பற்றிய வரலாற்று ஆய்வை அமுதன் என்ற தனசேகரன் அவர்கள் விரிவாக ஏற்கனவே படைத்துள்ளார். (இவர் தினத்தந்தியில் தலைமை செய்தி ஆசிரியராக பணியாற்றிவர்.)
அந்த ஆய்வுகளின் அடிப்படையில் இப்போது “ராஜேந்திர சோழரின் காவியக்காதல்” என்ற புதினத்தை வே.தபசுகுமார் இணைந்து அமுதன் என்ற தனசேகரன் அழகுடன் படைத்துள்ளார். அமுதன் தனசேகரன் ஏராளமான வரலாற்று ஆய்வு கட்டுரைகளை எழுதியுள்ளார். வே.தபசுகுமார் நாவல் மற்றும் சிறுகதைகள் எழுதியுள்ளார். செய்திசாரலில் கண்ணாயிரம் என்ற நகைச்சுவை தொடரை எழுதியவர் இவர். 
இப்போது படைத்துள்ள இந்த புதினம் வரலாற்றை திசைதிருப்பும் வகையில் அமைக்கப்படவில்லை. கற்பனையும், அழகு நடையும் கொண்ட இந்த புதினத்தில் வரலாறு சிறிதும் பிசகவில்லை.
நாடக அமைப்பில் இந்த நாவல் உருவாக்கப்பட்டு உள்ளது. ராஜராஜ சோழன் தன் அண்ணனை கொலை செய்தவர்கள் யார்? அவர்களை எப்படி பழிவாங்கினார் என்ற காட்சி அமைப்புகளோடு கதை தொடங்குகிறது. ஒவ்வொரு அத்தியாமும் படிக்க படிக்க விறுவிறுப்பாக நம்மை கதையோடு அழைத்துச் செல்கிறது.
பொதுவாக மன்னர்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியர் உண்டு. அதேபோல் ராஜராஜசோழனுக்கும், ராஜேந்திரசோழனுக்கும் இருந்தனர். அந்தப்புறத்து நாயகிகளும் உண்டு. இதை மறைக்காமல் இந்த நூலில் குறிப்பி்ட்டுள்ளார். ஆனால் அதற்கான காரணத்தை விளக்கியுள்ளார்கள். அந்த ஆசை நாயகிகள் மன்னருக்கு காமநாயகிகள் அல்ல.. அவர்கள் எவ்வாறு நாட்டுக்கு உறுதுணையாக இருந்தார்கள் என்பதும் இந்த நாவலின் முக்கிய அம்சம்.
ராஜேந்திரசோழனின் தாய் இறந்துவிடவே தந்தை ராஜராஜசோழனின் இன்னொரு மனைவியான பஞ்சவன்மாதேவி அவரை வளர்தார். அந்த சிற்றன்னையின் வயிற்றில் ஏன் குழந்தை பிறக்கவில்லை என்பதை சொல்லும்போது அவள் நம்நெஞ்சிலும் கோலோச்சிவிடுகிறாள். அந்த மகத்தான சிற்றன்னைக்கு ராஜேந்திரசோழன் பள்ளிப்படை அமைத்து பெருமை படைத்தான்.
ராஜேந்திரசோழன் பறவை நங்கை சந்திக்கும்விதம், அவளின் நடனத்தில் மயங்கி காதல்கொள்ளும் இடம் சினிமாவை மிஞ்சுகிறது.
ராஜராஜசோழன் நயவஞ்சகியின் சூழ்ச்சியில் சிக்கியது… இறுதிகாலத்தில் அவர் கட்டிய கோவிலில் தங்கியது.. போன்ற உணர்ச்சிமிகு சம்பவங்கள் உண்டு. அதேபோல் ராஜேந்திர சோழனின் இறுதி முடியும், அதேநேரம் அவருடைய நாயகி பறவை நங்கையின் இறப்பும் காதலை மெய்பிப்பதோடு நம் கண்களை கலங்கவும் வைக்கிறது.
இதில் சினிமாவை மிஞ்சும் பஞ்ச் வசனங்களும் உண்டு. “பயந்தவர்களுக்கு பூமி பாதாளம். துணிந்தவர்களுக்கு சொர்க்கம்”, “குங்கும நிறத்தில் ஆறுகள் ஓடின”, “அவர் மாலைநேர சூரியன் நான் தொடத்தான்போகிறேன்”, “நீ சப்தம்போடாதே உன் சப்தத்தை நிறுத்திவிடுவார்கள்”, “நான் ஆடவரவில்லை சோழநாட்டை ஆட்டுவிக்க வந்திருக்கிறேன்”, “நான் பணிப்பெண்ணை போகச்சொல்லவில்லை பனிப்பெண்ணை போகச்சொன்னேன்”, “புலிவாலை மிதித்துவிட்டான் சோழன் புலி அவனை கடிக்காமல் விடாது”, “சூரியனின் வெப்பம் குறைவதில்லை எனக்கு வயதாலும் வேகம் குறையாது” என்பன போன வார்த்தை ஜாலங்கள் நிறைய உண்டு.
இந்த நாவலை சினிமாவாக எடுத்தால் குறைந்தது முன்று பகுதியாக உருவாக்க வேண்டும். டெலிவிஷன் தொடராக தயாரித்தால் சிறப்பாக அமையும். காரணம் இது வீரம், காதல் நிறைந்தது. இது புனையப்பட்ட கதை அல்ல. வரலாற்று புதையல்.
இதனை மணிமேகலை பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர். 322 பக்கங்களை கொண்ட இந்த நாவல் விலை 325 ரூபாய். அவனைவரின் கையிலும் தவளவேண்டிய வரலாற்று பொக்கிஷம்.
-கடையம் பாலன்.