நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய கோரும் தீர்மானக் கடிதம்- சபாநாயகரிடம் கனிமொழி வழங்கினார்
1 min read
Kanimozhi submits resolution letter to Speaker demanding removal of Justice G.R. Swaminathan
9.12.2025
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இதன்படி தீபம் ஏற்றச்சென்றபோது அங்கு பிரச்சினை ஏற்பட்டது. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே, நீதிபதியின் தீர்ப்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளது. தி.மு.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் இது தொடர்பாக ஆலோசனை நடத்தின. நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் பேசப்பட்டது.
இந்த நிலையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோருவது தொடர்பான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் திட்டமிட்டு இருந்தது.
இந்த நிலையில்,சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யும் தீர்மான நோட்டீசை மக்களவை சபாநாயகரிடம் திமுக வழங்கவுள்ளது. தகுதி நீக்க தீர்மானம் கொண்டுவர, மக்களவையில் 100 உறுப்பினர்கள், மாநிலங்களவையின் 50 உறுப்பினர்கள் கையெழுத்திட வேண்டும், அந்த அடிப்படையில் திமுக சார்பில் மக்களவையில் இந்தியா கூட்டணி கட்சி உறுப்பினர்களின் கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை தகுதி நீக்கம் செய்வதற்கான இம்பீச்மெண்ட் தீர்மான கடிதத்தை, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி வழங்கினார்.
அவருடன் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக பொருளாளர் டி. ஆர். பாலு எம்.பி, இந்தியா கூட்டணி எம்.பிக்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஐகோர்ட்டு நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கக் கோரும் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 120 இந்தியா கூட்டணி எம்.பிக்கள் கையொப்பமிட்டுள்ளனர். திருப்பரங்குன்றம் மலையில் உள்ள நில அளவை தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிபதியின் உத்தரவால் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து, இந்தியா கூட்டணி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.