ஓ.பன்னீர் செல்வம் புதிய கட்சி தொடங்கினார்
1 min read
O. Panneerselvam launches new party
14.12.2025
அதிமுகவில் பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று குரல் கொடுத்து வரும் ஓ.பன்னீர்செல்வம்( ஓபிஎஸ்) புதிய கட்சியை தொடங்கி உள்ளார். தான் நடத்தி வந்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை கழகமாக மாற்றி இருக்கிறார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கூறி வரும் அவர், அதற்காக அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் ஒரு அமைப்பை துவங்கி செயல்பட்டு வந்தார்.
எப்படியும் அதிமுகவில் தம்மை இணைத்துக் கொண்டு விடுவது என்ற முனைப்பில் இருந்த ஓபிஎஸ், அதில் எவ்வித முன்னேற்றத்தையும் அடையாத நிலையில் இருந்தார். தொடர்ந்து கடும் அதிருப்தியில் இருந்த அவர், டிச.15ல் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து புதிய அறிவிப்பை வெளியிடுவதாக அறிவித்து இருந்தார்.
பின்னர் அந்த கூட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அறிவித்து, டிச.24ல் எம்ஜிஆர் நினைவு தினத்தில் தமது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வை அறிவிப்பதாக தெரிவித்து இருந்தார்.
இந் நிலையில், திடீர் திருப்பமாக, புதிய கட்சியை ஓபிஎஸ் தொடங்கி உள்ளார். தான் நடத்தி வந்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற அமைப்பை, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் என்ற பெயரில் கட்சியாக மாற்றி இருக்கிறார்.
ஆனால் தமது அமைப்பை கட்சியாக மாற்றி உள்ளதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. மாறாக அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் என்ற பெயரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் ஊழியர்களை திமுக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அவர் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.
இதுநாள் வரையில், அமைப்பின் பெயரில் அறிக்கை வெளியிட்டு வந்த அவர், முதல் முறையாக அமைப்பை கழகமாக மாற்றி அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறார். இந்த அறிக்கையில் கட்சி தலைவர், பொதுச் செயலாளர் யார் என்பன உள்ளிட்ட எந்த விவரங்களும் இல்லை.
எப்போதும் போல கழக ஒருங்கிணைப்பாளர், முன்னாள் முதல்வர் என்று தமது பொறுப்புகளை குறிப்பிட்டு கையெழுத்தை மட்டும் ஓபிஎஸ் இட்டுள்ளார். தமது கட்சியை அவர் முறைப்படி தேர்தல் கமிஷனில் பதிவு செய்துவிட்டாரா என்பது குறித்தும் எவ்வித தகவல்களும் இல்லை.
இதற்கு முன்னர் கடந்த 14ம் தேதி தான் நடத்தி வரும் அமைப்பின் பெயரில் கடைசியாக ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில் தலைமைக் கழகம், 154, பசுமை வழிச்சாலை, ராஜா அண்ணாமலைபுரம்,சென்னை-600028 என்ற முகவரி இடம்பெற்று இருந்தது.
தற்போது அமைப்பை கழகமாக மாற்றி அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் முகவரி மாறி இருக்கிறது. இதில் தலைமைக்கழகம், 38/31, 38/2, சேமியர்ஸ் ரோடு, நந்தனம், சென்னை- 600035 என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஆனால், இரண்டு அறிக்கையிலும் 93423 14327 என்ற செல்போன் எண் மட்டும் மாறாமல் இடம்பெற்றுள்ளது.