பாளை. மாணவியருக்கு மது விற்றோர் யார்?: அன்புமணி கேள்வி
1 min read
Who sold alcohol to the students?: Anbumani questions
15.12.2025
பா.ம.க., தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் ‘ஆக்ஸ்போர்டு’ என போற்றப்படும் பாளையங்கோட்டையில், அரசு உதவி பெறும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியர் சிலர், வகுப்பறையில் அமர்ந்து மது அருந்தும் ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் பரவி வருவது அதிர்ச்சி அளிக்கிறது.
சமீப காலமாகவே பள்ளிகளிலும், பள்ளிக்கு வெளியிலும் மாணவ – மாணவியர் மது அருந்தும் சர்ச்சை வீடியோக்கள் அதிக அளவில் வெளியாகின்றன. மது சார்ந்த அனைத்து சீரழிவுகளுக்கும், தி.மு.க., அரசு தான் காரணம்.
மது அருந்திய மாணவியரை ‘சஸ்பெண்ட்’ செய்த நடவடிக்கையில் பா.ம.க.,வுக்கு உடன்பாடு இல்லை. மாணவியருக்கு மனநல ஆலோசனைகள் வழங்கி, அவர்களை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசும், கல்வித் துறையும் மேற்கொள்ள வேண்டும்.
மது அருந்தியதற்காக மாணவியர் தண்டிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்ற விதியை மீறி, மாணவியருக்கு மது விற்பனை செய்தவர்கள் மீதோ, மதுவை வாங்கி கொடுத்தவர்கள் மீதோ என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது?
தமிழகத்தில் இளம் தலைமுறையினரை, மதுவுக்கு அடிமையாக்கிய பாவத்திற்கான பரிகாரத்தை, தி.மு.க., அரசு செய்தாக வேண்டும். மதுக் கடைகளை மூடுவது தான் அந்த பரிகாரம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.