June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

போராடிய பகுதி நேர ஆசிரியர்கள் கைது – அன்புமணி கண்டனம்

1 min read

Part-time teachers who protested were arrested – Anbumani condemns

8/1/2026
‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் கடந்த மாதம் (டிசம்பர்) 26-ந்தேதியில் இருந்து இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரையாண்டு விடுமுறை முடிந்து கடந்த 5-ந்தேதி முதல் பள்ளிகள் திறந்தநிலையிலும், இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை விட்டபாடில்லை.

பேச்சுவார்த்தை நடத்தியும், உடன்பாடு எட்டப்படவில்லை. நேற்றும் தங்கள் போராட்டத்தை ஆசிரியர்கள் முன்னெடுத்தனர். ஆசிரியர்களின் இந்த போராட்டம் தொடர்பாக தொடக்கக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கைகளை கையில் எடுத்தது. அதாவது, பணிக்கு வராமல் போராட்டம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடையாது என்றும் அரசு எச்சரித்து இருந்தது.
ல்வித்துறையின் உத்தரவு நேற்று வெளியான சில நிமிடங்களில், இடைநிலை ஆசிரியர்கள் போராட்டக்குழுவினர் வெளியிட்ட தகவலில், ‘5 ஆயிரம் ஆசிரியர்கள் வரை சென்னையில் நாளை (அதாவது இன்று) கூடுகிறார்கள் என்பது அரசின் கவனத்துக்கு சென்றதால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையெல்லாம் எதிர்பார்த்துதான் நாம் களத்தில் நிற்கிறோம்.

இதனை உடைக்க போராட்டத்தில் கட்டுக்கடங்காமல் ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும். அசையாத அரசாங்கத்தை அசைத்து பார்த்திருக்கிறோம். வெற்றி பெறும் வரை போராட்டம் உறுதியோடு செல்லும் என்று கூறியிருந்தனர். ஏற்கனவே அறிவித்தபடி, இன்று சென்னை எழும்பூரில் இடை நிலை ஆசிரியர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 14-வது நாளாக அவர்களின் போராட்டம் இன்றும் நீடித்த நிலையில், போலீசார் ஆசிரியர்களை குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பணி நிலைப்பு கோரி போராடிய பகுதி நேர ஆசிரியர்களை கைது செய்ததற்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் முன் போராட்டம் நடத்திய பகுதி நேர ஆசிரியர்களை காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கி கைது செய்துள்ளனர். சில பெண் ஆசிரியர்களின் தலைமுடியை பிடித்து இழுத்து காவல்துறை வாகனத்தில் ஏற்றிய கொடுமையும் நடந்திருக்கிறது. ஆசிரியர்களுக்கு எதிரான திமுக அரசின் அடக்குமுறை கண்டிக்கத்தக்கது.

அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களை கற்றுத் தருவதற்காக 2012-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட 16,500க்கும் கூடுதலான பகுதி நேர சிறப்பாசிரியர்களில் இப்போது சுமார் 12 ஆயிரம் பேர் மட்டுமே இப்போது பணியாற்றி வருகின்றனர். இவ்வளவு காலத்திற்கு பிறகும் மாதம் ரூ.12,500 மட்டுமே ஊதியம் பெறும் அவர்கள், தங்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று கோருவது மிகவும் நியாயமானது.

ஆனால், ஜனநாயக உரிமைகள் பற்றி வாய்கிழியப் பேசும் திமுக, பகுதி நேர ஆசிரியர்கள் அவர்களின் உரிமைக்காக போராடுவதைக் கூட அனுமதிக்காமல் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுகிறது. இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாத திமுக அரசு, போராடும் ஆசிரியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப் போவதாக எச்சரித்திருக்கிறது. அரசு ஆசிரியர்களுக்கு மோசடியான ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்து, அதையும் செயல்படுத்தாமல் ஏமாற்றி வருகிறது.

ஆட்சியும், அதிகாரமும் கைகளில் இருக்கும் திமிரில் திமுக ஆட்சியாளர்கள், அரசு ஊழியர்கள் மீதும், ஆசிரியர்கள் மீதும் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுகின்றனர். இதன் மூலம் போராட்டங்களை முடக்கி விடலாம் என்று கனவு காண்கின்றனர். மக்கள் சக்தியை அதிகாரத்தின் மூலம் ஒடுக்க முடியாது. அதிகாரத் திமிரில் அடக்குமுறைகளை ஏவுபவர்களுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் படுதோல்வி எனும் தண்டனையை வழங்கவிருப்பது உறுதி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *