டெல்லியில் அமித் ஷா அலுவலகத்தின் முன் திரிணாமுல் காங். எம்.பி.க்கள் போராட்டம்
1 min read
Trinamool Congress MPs protest in front of Amit Shah’s office in Delhi
9/1/2026
மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் (I-PAC) நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நேற்று தீவிர சோதனைகளை மேற்கொண்டது.
கொல்கத்தாவின் சால்ட் லேக் செக்டர் V-ல் உள்ள ஐ-பேக் (I-PAC) அலுவலகம் மற்றும் லௌடன் வீதியில் உள்ள அதன் இயக்குநர் பிரதீக் ஜெயின் இல்லம் உட்பட சுமார் 10 இடங்களில் சோதனைகள் நடைபெற்றது.
மம்தா பானர்ஜியின் தேர்தல் உத்தி குழுவின் முக்கிய உறுப்பினராக ஜெயின் பரவலாக விவரிக்கப்படுகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலக்கரி கடத்தல் ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் இந்தச் சோதனைகள் நடத்தப்படுவதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் சோதனை தொடர்பான செய்திகள் வெளிவந்ததும் பானர்ஜியின் ஆதரவாளர்கள் சால்ட் லேக் அலுவலகத்திற்கு வெளியே கூடினர்.
மேலும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, பிரதீக் ஜெயினின் இல்லத்திற்கு சென்றுள்ளார்.
மேலும் அங்கு அவர் சில ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகளை கையில் எடுத்துக்கொண்டு வெளியே வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து விசாரணைக்கு இடையூறு விளைவித்ததாகவும், முக்கிய ஆதாரங்களை மம்தா பானர்ஜி எடுத்துச் சென்றுவிட்டதாகவும் கூறி அமலாக்கத்துறை கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல்கள் மற்றும் தேர்தல் ரகசியங்களை அபகரிக்கவே மத்திய அரசு இந்தச் சோதனையை நடத்துவதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
தன்மீதான அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு குறித்து பேசிய மம்தா பானர்ஜி, தேர்தல் வியூகங்கள், வேட்பாளர் பட்டியல்கள் மற்றும் கட்சியின் ரகசியத் தரவுகளைச் சேகரிக்கவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமலாக்கத்துறையை பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் இந்தச் சோதனையைக் கண்டித்து இன்று மாநிலம் தழுவிய போராட்டங்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் அழைப்பு விடுத்தது.
இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி-க்களான மஹுவா மொய்த்ரா, டெரெக் ஓ பிரையன், கீர்த்தி ஆசாத் உள்ளிட்டோர் டெல்லியில் அமித் ஷாவின் அலுவலகம் முன்பாகத் திரண்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“வங்காளம் மோடி-ஷாவின் அசுத்தமான அரசியலை நிராகரிக்கிறது” என்ற பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.
தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபட்டதாக எம்.பி-க்களை டெல்லி போலீசார் அவர்களை குண்டுக்கட்டதாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.
“மத்திய உள்துறை அமைச்சகம் அமலாக்கத்துறையைத் தவறாகப் பயன்படுத்தி எங்களது கட்சியின் அரசியல் ரகசியங்களையும், தேர்தல் வியூகங்களையும் திருட முயற்சிக்கிறது.
மம்தா பானர்ஜி ஒரு பெண் சிங்கம், அவர் தனது கட்சியையும் மக்களையும் பாதுகாப்பார்” என்று மஹுவா மொய்த்ரா தெரிவித்தார்.
இதற்கிடையே அமித் ஷாவால் நாட்டைப் பாதுகாக்க முடியவில்லை, ஆனால் எதிர்க்கட்சிகளின் ஹார்ட் டிஸ்க் மற்றும் வேட்பாளர் பட்டியலைத் திருட மட்டும் முடிகிறது என்று மம்தா பானர்ஜி சாடினார்.