June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

விஜய்யை நான் சாதாரணமாக எடை போடவில்லை – அண்ணாமலை பேட்டி

1 min read

I don’t judge Vijay lightly – Annamalai

14.1.2026
டெல்லியில் தமிழக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழ்நட்டில் தற்போது திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, தவெக, நாதக என நான்கு முனை போட்டி இருக்கிறது. மற்றவர்களை சிறுமைப்படுத்தவில்லை. தேர்தல் நெருங்க நெருங்க திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு இடையிலான இருமுனை போட்டியாக களம் மாறும் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

விஜய்யை நான் சாதாரணமாக எடை போடவில்லை. அவர் ஒரு சினிமா ஸ்டார். மாஸ் இருக்கிற ஸ்டார். தவெகவில் அண்ணன் செங்கோட்டையன் உட்பட பலர் இணைந்திருக்கிறார்கள். களத்தில் பார்க்கிறேன். தொண்டர்கள் பரபரப்பாக வேலை செய்கிறார்கள். 2026 தேர்தலில் திமுக வேண்டாம் என விஜய் நினைத்தால் யார் வேண்டும் என்பதை அவர் தெளிவாக கூற வேண்டும். எங்களுக்கும் அதிமுகவுக்கும் கொள்கை வேறுபாடு இருந்தாலும் திமுகை வீழ்த்த கூட்டணி வைத்துள்ளோம் என்றார்.

திமுகவுக்கும், தவெகவுக்கும்தான் போட்டி என விஜய் கூறுகிறாரே என்ற கேள்விக்கு,

தமிழ்நாட்டில் நான்கு பிரதான கட்சிகள் இருக்கின்றன. திமுக தலைமையிலான கூட்டணி இருக்கிறது, அதிமுக தலைமையிலான என்.டி.ஏ உள்ளது; தமிழக வெற்றிக்கழகம் இருக்கிறது; சீமானின் நாம் தமிழர் உள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க திமுகவிற்கு எதிரான வாக்குகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் கூட்டணியை பொறுத்தவரை அனுபவம் உள்ளது; பிரதமரின் ஆசிர்வாதம் உள்ளது. ஜன.23 அன்று பிரதமரின் தேர்தல் பரப்புரை சென்னை அருகில் தொடங்க உள்ளது. அதனால் எங்களுக்கு பெரும் நம்பிக்கை உள்ளது.
தலைவர்களை தாண்டி அண்ணாமலையின் எண்ணம் என்ன, விஜய் கூட்டணிக்குள் வருவது குறித்து என்ற கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை,

நான் எதுவும் நினைக்கவில்லை. அதற்கான முடிவை தலைவர்கள் எடுப்பார்கள். என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு கட்சியின் இலக்கு என்ன என்பதை பார்க்கவேண்டும். சீமானைப் பொறுத்தவரை திராவிட கட்சிகள் வேண்டாம். விஜய் திமுக வேண்டாம் என்றும் நினைத்தால், யார் வேண்டும் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். எங்களுக்குள் கொள்கை முரண்பாடு இருந்தாலும், திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக அதிமுக-பாஜக கூட்டணி சேர்ந்துள்ளது. சிந்தாந்தரீதியில் எங்களுக்குள் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

விஜய் வந்தால் உங்கள் கூட்டணி பலம் வாய்ந்ததாகும் என தலைமையிடம் கூறுவீர்களா?

நான் தலைமையிடம் எதுவும் கூறுவதில்லை. முரண்பாடு இருப்பவர்களை அழைத்து ஒரே இடத்தில் வைத்துக் கொள்வதும் பிரச்சனைதான். எல்லாவற்றையும் ஒன்றாக குழப்பினால் கூட்டணிக்குள் கெமிஸ்ட்ரி இருக்காது. விஜய்யின் அரசியல் விஜய்க்கு, எங்களின் அரசியல் எங்களுக்கு.

அதுபோலத்தான் சீமானும். சீமானை ஏன் குறைத்து எடைப்போடுகிறீர்கள்? நாடாளுமன்ற தேர்தலில் 8.5 சதவீதம் ஓட்டு வாங்கியுள்ளார். சீமான் இந்த தேர்தலில் எவ்வளவு வாக்குவாங்குவார், வெற்றிப்பெறுவார் என்பதை நீங்கள் பார்க்கவேண்டும். யாரையும் லேசாக எடைப்போடக்கூடாது. எங்கள் கூட்டணி வலிமையாக உள்ளது.

சீமானின் கட்சி வலிமையானதா?

யாரையும் உதாசீனப்படுத்தக்கூடாது என்பது என்னுடைய கருத்து. எல்லோருமே தலைவர்கள். எல்லோரும் வாக்குகளை பெறுகிறார்கள். நாடாளுமன்றத்தில் ஒரு கட்சி இத்தனை சதவீதம் வாக்கு வாங்கியுள்ளது என்றால், அதனை தட்டி தூசிபோல் பேசக்கூடாது. அவர்களுக்கும் வாக்குவங்கி, வேறுபட்ட எண்ணங்கள் உள்ளன. மக்கள் மனதிலும் ஓட்டம் உள்ளது. இன்று நான்குமுனை போட்டி உள்ளது. அடுத்த அறுபது நாட்களில் 2 முனை போட்டியாக மாறும்.

பாமக, தேமுதிக குறித்து பேசாதது ஏன்?

பாமக எங்கள் கூட்டணியில் உள்ளது. தேமுதிக தனியாக போவதாக கூறுகிறார். மருத்துவர் ராமதாஸ் நல்லமுடிவை எடுப்பார். அதுபோல பிரேமலதா விஜயகாந்தும் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறேன்.” என தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *