டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்
1 min read
Karapanpoochchi Janata Party members protest in Delhi
6.6.2026
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தை கண்டித்து டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சமூக வலைதளத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற இயக்கம் கிண்டலாக ஆரம்பிக்கப்பட்டது.இந்த இயக்கத்திற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்தது. இந்த இயக்கத்தின் நிறுவனர் அபிஜீத் திப்கே வெளிநாட்டில் இருந்த நிலையில், தான் இந்தியா திரும்பிய பிறகு, நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று கூறியிருந்தார்.
அதன்படி, இன்று அவர் டில்லிக்கு வந்த நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி, ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஏராளமானோர் குவிந்தனர். இளைஞர் போராட்டத்தில் இந்திய மார்க்சிஸ்ட் (எம்எல்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதனிடையே, போராட்டத்தின் போது, இரு குழுக்களுக்கு இடையே ஏற்படவிருந்த மோதலைத் தடுக்கும் விதமாக, 6 பேரை டில்லி போலீசார் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தனர்.