அல் பலாஹ் பல்கலைக்கழகத்தில் நோயாளிகள், டாக்டர்கள் எல்லாம் போலி
1 min read
All patients and doctors at Al-Falah University are fake
18.1.2026
டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிக்கியுள்ள அல் பலாஹ் பல்கலை குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், பல்வேறு திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்தாண்டு நவம்பர் 10ம் தேதி டில்லி செங்கோட்டை அருகே போக்குவரத்து சிக்னலில் நின்றிருந்த கார் திடீரென வெடித்து சிதறியதில், காரை ஓட்டிய டாக்டர் உமர் நபி உள்பட 15 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் உமர் நபியின் கூட்டாளிகளான பெண் டாக்டர் ஷாஹின் சையீத் மற்றும் டாக்டர்கள் முசம்மில், ஆதிர் ராதோர் உள்பட 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஹரியானாவின் பரிதாபாதில் உள்ள அல் பலாஹ் பல்கலையில் பணியாற்றி வந்தனர்.
இதையடுத்து, அல் பலாஹ் பல்கலையை தன்னுடைய விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்த சிபிஐ அதிகாரிகள், அங்கு பணியாற்றி வந்தவர்கள், மாணவர்களிடம் தொடர்ந்து தீவிர சோதனை நடத்தினர். மாணவர்களிடம் முறைகேடாக பணம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டதால், இந்த வழக்கு அமலாக்கத்துறையின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, அப்பல்கலையின் வேந்தர் ஜாவத் அகமது கைது செய்யப்பட்டார். மேலும், அல் பலாஹ் பல்கலையின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 16) டில்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதில், பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த டாக்டர்கள், அல் பலாஹ் வளாகத்தை, ஒரு தளமாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், அல் பலாஹ் பல்கலைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய டாக்டர் முசம்மில், ஷாஹின் சயீத் மற்றும் உமர் நபி ஆகிய 3 டாக்டர்களை, எந்தவித போலீஸ் சரிபார்ப்பும் இன்றி பல்கலைக்கழகம் பணியமர்த்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தேசிய மருத்துவ ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக, பல டாக்டர்களை பெயரளவில் மட்டுமே பணியமர்த்தியுள்ளனர். இவர்கள் மாதத்திற்கு 22 நாட்களோ அல்லது வாரத்திற்கு இருமுறை மட்டுமே பணிக்கு வருபவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் டாக்டர்களுக்குப் பாடம் நடத்தவோ அல்லது நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கவோ இல்லை.
மருத்துவ ஆணைய அதிகாரிகளின் நேரடி ஆய்வுகளின் போது, பல்கலை மருத்துவமனை செயல்படுவது போன்ற தோற்றத்தை உருவாக்க போலி நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடைசியாக தேசிய மருத்துவ ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்வதற்கு முன்பு, பல்கலை மருத்துவமனையில் நோயாளிகளோ, டாக்டர்களோ, ஊழியர்களோ இல்லை.
பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய உமர் நபி உள்ளிட்ட 3 டாக்டர்களும், தனது பதவிக்காலத்தில் தான் நியமிக்கப்பட்டனர் என்பதை பல்கலை வேந்தர் ஜாவத் அகமது ஒப்புக்கொண்டுள்ளார். டாக்டர்களின் எந்தப் பின்னணி சரிபார்ப்பும் செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக சுமார் ரூ.493.24 கோடி வருவாயை முறைகேடாக அல் பலாஹ் பல்கலை ஈட்டியுள்ளது. என்ஏஏசி அங்கீகாரம் மற்றும் யுஜிசி அங்கீகாரம் இருப்பதாக பொய்யான தகவலை சொல்லி, மாணவர்களிடம் இருந்து முறைகேடாக பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையைப் பயன்படுத்தி, பல்கலையின் கிளை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன, இவ்வாறு கூறப்பட்டுள்ளது.