100 நாள் வேலைத் திட்டம் காந்தி பெயரில் தொடர சட்டசபையில் தீர்மானம்
1 min read
Resolution passed in the Assembly to continue the 100-day work program in the name of Gandhi
23.1.2026
நுாறு நாள் வேலை திட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டசபையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வந்தார். பின்னர் இந்த தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் 2005ன் படி கிராமப்புற மக்களின் வேலைக்கான உரிமை நிலைநாட்டப்பட வேண்டும். மக்களின் வேலைக்கான தேவைக்கு ஏற்பவும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் மாநில செயல் திறன் அடிப்படையிலும் தொடர்ந்து நீதி ஒதுக்கீடு செய்வது உறுதி செய்யப்பட வேண்டும்.
இந்த திட்டத்தின் கீழ் பெரும்பான்மையாக பலன் அடைந்து வந்த பெண்கள், மாற்றுத் திறனாளிகள், ஆதித்திராவிட மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரங்கள் தொடர்ந்து பாதுகாக்கப்பட சமூகப்பாதுகாப்பினை உறுதி செய்யதிட முந்தைய ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்த நிதிகளில் குறையாமல், நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.
தன்னிச்சையாக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யும் என உள்ள தற்போதைய புதிய நடைமுறையை கைவிட்டு, ஏற்கனவே மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்டத்தின் கீழ், பின்பற்றப்பட்ட வேலைக்கான தேவைக்கு ஏற்ப, நிதி ஒதுக்கீடு செய்யும் நடைமுறையை தொடர வேண்டும். மேலும் கூட்டாட்சி தத்துவத்திற்கு மதிப்பளித்து மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டினை, வேலைக்கான தேவைக்கு ஏற்ப, பகிர்ந்தளிக்கும் வழிமுறையை மாநில அரசே வகுத்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும்.
நிதிச்சுமை
இந்த புதிய திட்டத்தில் மாநில அரசின் பங்களிப்பு 40 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளதால், மாநில அரசின் நிதிச்சுமையை கணிசமாக அதிகரிப்பதாக உள்ளது. எனவே புதிய திட்டத்திற்கான நிதி பங்களிப்பு மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்டத்திற்கான நிதி பங்களிப்பினை போலவே, திருத்தி அமைக்கப்பட வேண்டும். மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி பல்வேறு உள்நோக்கங்களை கொண்டு இந்த திட்டத்திற்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டம் மகாத்மா காந்தி பெயரில் தொடர வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இந்த தீர்மானம் விவாதத்திற்கு பிறகு சட்டசபையில் ஒரு மனதமாக நிறைவேற்றப்பட்டது.