கடையநல்லூரில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை பிடித்த பொதுமக்கள்
1 min read
Public catches youth who stole jewelry from woman in Kadayanallur
19.2.2026
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் செல்வவிளை 3-வது தெருவைச் சேர்ந்த பரமசிவன் என்பவரின் மனைவி மாரியம்மாள் (வயது 50). இவர் நேற்று அப்பகுதியில் உள்ள தினசரி மார்க்கெட்டுக்குச் சென்று காய்கறிகள் வாங்கிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
கடையநல்லூர் காவல் நிலையம் முன்பாகச் சாலையோரம் அவர் நடந்து சென்றபோது, அங்கு வந்த மர்ம நபர் திடீரென மாரியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 8.5 சவரன் தங்க தாலி சங்கிலியைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடினார்.
திடீர் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த மாரியம்மாள் “திருடன்… திருடன்…” என்று சத்தமிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக விரைந்து சென்று அந்த நபரை விரட்டிப் பிடித்தனர். பின்னர், அந்த நபரை அங்கிருந்த கடையநல்லூர் போலீஸ் நிலையத்திலேயே ஒப்படைத்தனர்.
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நகை பறிப்பில் ஈடுபட்டவர் கடையநல்லூர் வானவர் தெருவைச் சேர்ந்த சேக் மைதீன் மகன் அர்மான் சாலிக் (வயது 30) என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல் நிலையத்தின் அருகிலேயே பட்டப்பகலில் நடந்த இந்தத் துணிச்சலான நகை பறிப்புச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.