June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

வெற்றி பெற்ற 4010 பேருக்கு பணி வழங்க அன்புமணி வலியுறுத்தல்

1 min read

4010 candidates who passed the competitive examination should not be wasted – Anbumani

22.2.2026
பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாடு அரசின் மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் சார்பில் 1429 சுகாதார ஆய்வாளர்களை தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட போட்டித் தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரி பார்ப்பும் முடிவடைந்து விட்ட நிலையில், இன்று வரை அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை. பல ஆண்டுகள் காத்திருந்து அரசு வேலைக்கு காத்திருந்தவர்களுக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும் கூட பணி நியமன ஆணைகளை வழங்க மறுப்பது நியாயமல்ல.

தமிழ்நாடு அரசின் மருத்துவத் துறைக்கு 1429 சுகாதார ஆய்வாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை கடந்த ஆண்டு அக்டோபர் 27-ஆம் தேதி வெளியிடப்பட்டு, அதனடிப்படையில் விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட்டு, அடுத்த சில வாரங்களில் முடிவுகள் வெளியிடப்பட்டன. அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்து கடந்த 13-ஆம் தேதி பணி நியமன ஆணை வழங்கப்படவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் அது கைவிடப்பட்டது.

இதற்குக் காரணம் சுகாதார ஆய்வாளர் பணிக்கான போட்டித் தேர்வில் முறைகேடு நடந்ததாகக் கூறி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் தான் என்று கூறப்பட்டது. ஆனாலும், விசாரணையில் அது உண்மையில்லை என்று தெரியவந்ததையடுத்து அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால், இதற்கு முன்பு நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி கிடைக்காமல் தற்போது தொகுப்பூதியத்தில் பணிபுரிபவர்கள் தங்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என புதிய வழக்கு தொடர்திருப்பதால் நியமன ஆணை வழங்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அதேபோல், கூட்டுறவுத் துறையில் உதவியாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள் 2581 பேரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் கடந்த அக்டோபர் 5, 11 ஆகிய தேதிகளிலும், சான்றிதழ் சரிபார்ப்பு நவம்பர் 15, 21 ஆகிய தேதிகளிலும் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், அந்தப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் இதுவரை வெளியிடப்படவில்லை. அதற்கும் நீதிமன்ற வழக்குகள் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

சுகாதார ஆய்வாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் ஏற்கனவே கொரோனா காலத்திற்கு சுகாதார ஆய்வாளர்களாக தற்காலிகமாக பணியாற்றி, அதன் பின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் தற்காலிகமாக பணியாற்றி வருபவர்கள் ஆவர். தமிழ்நாட்டில் பத்தாண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் சுகாதார ஆய்வாளர்களை நிரந்தரமாக நியமிப்பதற்கான ஆள்தேர்வு நடைபெறுவதால் அதை வராது வந்த வாய்ப்பாக அவர்கள் கருதுகின்றனர். அந்த வாய்ப்பை அவர்களிடமிருந்து பறித்து விடக்கூடாது.

அதேபோல், கூட்டுறவுத்துறை பணிக்கான தேர்வு எழுதியவர்களில் பல்லாயிரக்கணக்கானோர் பல ஆண்டுகளாக இந்தப் பணிக்கு காத்திருப்பவர்கள் ஆவர். அடுத்த சில நாள்களுக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படவுள்ள நிலையில், அறிவிக்கை வெளியானால், இந்த நியமனங்களை செய்ய முடியாமல் போய்விடும். எனவே, நீதிமன்ற வழக்குகளை காரணம் காட்டி அவர்களுக்கு கைக்குக் கிடைத்ததை வாய்க்கு கிடைக்காமல் செய்து விடக் கூடாது.

தமிழக அரசு உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி சுகாதார ஆய்வாளர்கள், கூட்டுறவுத் துறை உதவியாளர்கள் பணிக்கு தகுதியானவர்களை நியமிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும். 1429 சுகாதார ஆய்வாளர்கள், 2581 கூட்டுறவுத்துறை உதவியாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள் என 4,010 பேருக்கும் உடனடியாக பணி நியமன ஆணைகளை அரசு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *