மடத்தில் சிறுவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்- சாமியார் மீது வழக்குப்பதிய உத்தரவு
1 min read
Sexual abuse of children in a monastery – Court orders registration of POCSO case against priest
22.2.2026
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பிரபல சாமியார், சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதி.
சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதி வாரணாசியில் தனது வித்யா மடம் ஆசிரமத்தில் தங்கியிருந்த ‘சிறுவர்’களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார்கள் எழுந்தன.
ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி முக்தி நிர்மான் அறக்கட்டளையின் தலைவர் அசுதோஷ் பிரம்மாச்சாரி மஹாராஜ் மற்றும் சிலர் இணைந்து போலீசில் இதைப்பற்றி புகார் அளித்தனர்.
ஆனால் பிரயாக்ராஜ் காவல்துறையினர் இந்த வழக்கைப் பதிவு செய்ய மறுத்ததால், அசுதோஷ் நீதிமன்றத்தை நாடினார்.
அவரது புகார் மனுவில், வித்யா மடத்தில் தங்கியிருந்த சிறுவர்கள், அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதியால், அந்த மடத்தின் 5வது மாடியில் வைத்து பாலியல் துன்புறுத்ததலுக்கு ஆளாக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் இதற்கான வீடியோ ஆதாரங்கள் அடங்கிய சி.டியை சமர்ப்பித்து, பாதிக்கப்பட்டவர்களில் இரண்டு சிறுவர்களை நீதிமன்றத்தில் அசுதோஷ் ஆஜர்படுத்தினார்.
மேலும், அவிமுக்தேஸ்வரானந்தர் தனது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாகவும், ஆன்மீகப் பணியின் போர்வையில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை பிரயாக்ராஜ் சிறப்பு போக்சோ நீதிமன்றம் நேற்று விசாரித்தது. சமர்ப்பிக்கப்பட்ட வீடியோ ஆதாரங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் வாக்குமூலங்களை நீதிமன்றம் ஆய்வு செய்தது.
மனுவை விசாரித்த நீதிபதி வினோத் குமார், சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களை ஏற்றுக்கொண்டு, காவல்துறை இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகள் மற்றும் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டமான போக்சோ சட்டத்தின் பிரிவுகள் ஆகியவற்றின் கீழ் அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதி மீது FIR பதிவு செய்ய காவல்துறையினருக்கு அவர் உத்தரவிட்டார்.