June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆப்கானிஸ்தான் தாக்குதலில் 55 வீரர்கள் பலி – பாகிஸ்தான் பதில் தாக்குதல்

1 min read


55 soldiers killed in Afghan attack – Pakistan retaliates

7.2.2026
பாகிஸ்தான் மற்றும் தாலிபான் அரசு ஆளும் ஆப்கானிஸ்தான் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதலை நடத்துவோர் தாலிபான் ஆதரவு பெற்றவர்கள் என பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இரு நாடுகளிடையே வெடித்த மோதல் பேச்சுவார்த்தைக்கு பின் முடிவுக்கு வந்தது.

இதற்கிடையே கடந்த 6 ஆம் தேதி இஸ்லாமாபாத் ஷியா பிரிவினர் மசூதியில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 31 பேர் வரை கொல்லப்பட்டனர். இதற்கு ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் குற்றம்சாட்டியது.

எனவே பதிலடியாக இந்த வாரத்தில் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து 20 பயங்கரவாதிகளை கொன்றதாக பாகிஸ்தான் தெரிவித்தது. ஆனால் பெண்கள் குழந்தைகள் உட்பட 20 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்தது.

இந்த சூழலில் நேற்று இரவு பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. ராணுவ முகாம்கள் உட்பட பல்வேறு இடங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 55 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு சொந்தமான பல முகாம்களை ஆப்கானிஸ்தான் கைப்பற்றியதாகவும் பாக் வீரர்கள் பலர் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே பதிலடி தாக்குதலை தொடங்கியுள்ள பாகிஸ்தான், போரை வெளிப்படையாக அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல், கந்தஹார் ஆகிய நகரங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளது.

காபூலில் குறைந்தது மூன்று இடங்களலும், கந்தஹார் மற்றும் தென்கிழக்கு மாகாணமான பக்தியாவிலும் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக தாலிபான் அரசு செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்திருந்தார்.

இதனால் இரு நாடுகளுக்கு இடையில் முழு அளவிலான போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தங்கள் நாட்டின் மீது நடந்த தாக்குதல்களுக்கு பதிலடியாகவே இந்த தாக்குதல் என்று கூறிய பாகிஸ்தான், தங்கள் ராணுவ முகாம்களை ஆப்கானிஸ்தான் கைப்பற்றியதாக கூறப்படும் தகவலை நிராகரித்தது.

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் பேசுகையில், “எங்களின் பொறுமைக்கு ஒரு எல்லை உள்ளது. இப்பொது வெளிப்படையாக போர் தொடங்கிவிட்டது” என்று தெரிவித்தார். மேலும் இது பாகிஸ்தான் மீதான இந்தியாவின் மறைமுக போர் எனவும் ஆசிப் குற்றம்சாட்டினார்.

தாலிபானுக்கு எதிராக ‘ஆப்ரேஷன் கசாப் லில்-ஹக்’ என்ற நடவடிக்கையை தொடங்குவதாகவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *