June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

சென்னையில் நிதிநுட்ப கோபுரம்; மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

1 min read

Finance Tower in Chennai; MK Stalin inaugurates

2.3.2026
உலகம் டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் நிதிநுட்ப துறை சார்ந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கி, நிதிநுட்ப துறையில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழ்நாட்டினை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் 17.06.2023 அன்று சென்னை மாவட்டம், ஆலந்தூர் வட்டம், நந்தம்பாக்கத்தில் 56 ஏக்கர் நிலப்பரப்பில், நிதிநுட்ப நகரம் (FinTech City) அமைப்பதற்கும், அதில் முதற்கட்டமாக 5.56 லட்சம் சதுர அடி கட்டிட பரப்பளவில் சர்வதேச தரத்திலான நிதிநுட்ப கோபுரம் (FinTech Tower) என்ற அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டினார்.

இதற்காக, சென்னை நந்தம்பாக்கத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை சார்பில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார். இந்த நிதிநுட்ப கோபுர கட்டிடம் 249 கோடி ரூபாய் செலவில் இரண்டு அடித்தளங்கள், தரை மற்றும் பதினொன்று தளங்களுடன் 5.56 லட்சம் சதுர அடி பரப்பளவில், அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சரால் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.

நிதி மற்றும் நிதிநுட்ப நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை தொடங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் உள்ள உயர்தர அலுவலக இடங்கள் நிதிநுட்ப கோபுரத்தில் (Fintech Tower) அமைக்கப்பட்டுள்ளன. LEED Platinum Green Building தரத்துடன் உருவாக்கப்பட்ட இக்கட்டிடம், வாகன நிறுத்த வசதிகள், 250 மற்றும் 50 இருக்கை வசதிகளை கொண்ட கூட்டரங்கங்கள், உணவகங்கள், உடற்பயிற்சி கூடம், குழந்தைகள் பராமரிப்பு மையம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. தடையற்ற வணிக சூழலை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உலக தரத்திலான உள்கட்டமைப்புடன் உருவாக்கப்பட்ட இக்கட்டிடம், தமிழ்நாட்டின் நிதிநுட்ப வளர்ச்சிக்கான முக்கிய மையமாக திகழும்.

இந்நிகழ்ச்சியின்போது, M/s. Prime Forex Pvt. Ltd., M/s. Simptra Technologies Pvt. Ltd., மற்றும் M/s. MidFin Wealth Pvt. Ltd. ஆகிய நிறுவனங்களுக்கு நிதிநுட்ப கோபுரத்தில் அலுவலக இடங்கள் ஒதுக்கீட்டிற்கான ஆணைகளை முதல்-அமைச்சர் வழங்கினார்.

இவ்விழாவில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, சட்டமன்ற உறுப்பினர்கள் இ. கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், தலைமை செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., டிட்கோ தலைவர் சந்தியா வேணுகோபால் சர்மா இ.ஆ.ப., தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை செயலாளர் வி. அருண் ராய், இ.ஆ.ப., டிட்கோ மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., டிட்கோ நிர்வாக இயக்குநர் சுவேதா சுமன், இ.ஆ.ப., தொழில் மற்றும் நிதி துறையை சார்ந்த நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *