November 3, 2026

Seithi Saral

Tamil News Channel

நாடு முழுவதும் நடப்பு மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாக வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

1 min read

Meteorological Department warns of potential record-high temperatures across the country this month

1.11.2026
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இந்த மாதம் இயல்பை விட கூடுதலாக அதிகபட்ச வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

நடப்பு ஆண்டில் நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழைக்காலத்தில் சரியான அளவு மழைப்பொழிவு இல்லை. இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகள் வறண்டன. பல நீர் தேக்கங்களில் பல அடி வரை நீர்மட்டம் குறைந்தது.

இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை காலம் கடந்த அக்டோபர் மாதத்தின் மத்தியில் தொடங்கியது. இந்த சூழலில், இந்திய வானிலை ஆய்வு மையம் நவம்பர் மாதத்துக்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதில் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும் என தெரிவித்து உள்ளது.

அந்த வகையில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிகமான குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதேநேரம் மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு முதல் இயல்பை விட குறைந்த அளவு வெப்பம் பதிவாகும்.

இதைப்போல இமயமலை அடிவாரப்பகுதிகளை தவிர மீதமுள்ள பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட கூடுதலாக அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் என எதிர்பார்ப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அதேநேரம் இமயமலை அடிவாரப்பகுதிகளில் இயல்பு முதல் இயல்பை விட குறைந்த அளவு அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும். நவம்பர் மாதத்தில் மழையளவை பொறுத்தவரை, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட குறைந்த அளவு மழைப்பொழிவு இருக்கும். அதேநேரம் மத்திய, வடகிழக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவில் இயல்பானது முதல் இயல்பை விட அதிக அளவு மழையை எதிர்பார்க்கலாம்.

இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக இந்த மாதம் 77 சதவீத நீண்ட கால சராசரி மழையளவு இருக்கும். கடந்த 1971 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் நவம்பர் மாத சராசரி நீண்ட கால மழையளவு என்பது 29.7 மி.மீ. ஆகும்.

தற்போது மிகவும் வலுவான எல் நினோ தாக்கங்கள் நீடித்து வருவதை சுட்டிக்காட்டியுள்ள வானிலை ஆய்வு மையம், நவம்பர்-டிசம்பர் மாதங்களில் மிகவும் வலுவான எல் நினோ நிலைமைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சமீபத்திய பருவமழை திட்ட ஒருங்கிணைந்த முன்னறிவிப்பு அமைப்பு மற்றும் பிற உலகளாவிய காலநிலை மாதிரி முன்னறிவிப்புகள் குறிப்பிட்டு இருப்பதாகவும் கூறியுள்ளது.

நவம்பர் மாதத்தில் நாடு முழுவதும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தெரிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *