கிரெடிட் கார்டு விதிகளில் ஏப்ரல் 1-ந் தேதி முதல் வரும் முக்கிய மாற்றங்கள்
1 min read
Key changes to credit card rules from April 1
9.3.2026
வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கிரெடிட் கார்டு விதிகளில் சில முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. அதன் விவரங்களை பார்க்கலாம்.
இனி கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது பான் அட்டை கட்டாயம். பான் அட்டை இல்லாமல் வங்கிகள் விண்ணப்பங்களை ஏற்கமாட்டார்கள். இதனால் செலவுகள் வரி அமைப்புடன் இணைக்கப்படும். போலி கணக்குகள் மற்றும் தவறான பயன்பாடு குறையும்.
மேலும், ஒரு நிதியாண்டில் கிரெடிட் கார்டு மூலம் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் ரொக்கமற்ற செலவுகள் செய்தால், அந்த விவரங்களை வங்கி வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும். அதேபோல், ரூ.1 லட்சம் அல்லது அதற்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனை செய்தாலும் அது கண்காணிக்கப்படும். அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகள் அனைத்தும் பதிவு செய்யப்படும்.
இனி கிரெடிட் கார்டு மூலம் வருமான வரியும் செலுத்த முடியும். இது வசதியாக இருந்தாலும், செயலாக்கக் கட்டணம் மற்றும் வட்டி விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே கவனமாக பயன்படுத்த வேண்டும்.
நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வழங்கும் கிரெடிட் கார்டுகளையும் கவனமாக கையாள வேண்டியிருக்கும். அந்த அட்டை தனிப்பட்ட செலவுக்கு பயன்படுத்தப்பட்டால், அந்த தொகை ஊழியரின் வருமானமாகக் கருதப்படலாம். அதற்கு வரியும் விதிக்கப்படலாம். எனவே, அலுவலக செலவுகள் மற்றும் தனிப்பட்ட செலவுகள் தெளிவாகப் பிரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
கடந்த மூன்று மாதங்களுக்குள் வழங்கப்பட்ட கிரெடிட் கார்டு அறிக்கையை பான் கார்டு விண்ணப்பத்திற்கான செல்லுபடியாகும் முகவரிச் சான்றாக வழங்கலாம். இது கூடுதல் ஆவணங்களுக்கான தேவையைக் குறைப்பதன் மூலம் பான் விண்ணப்ப செயல்முறையை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.