போரில் உயிரிழப்பு; ஈரான் ஜனாதிபதியிடம் கவலை தெரிவித்த பிரதமர் மோடி
1 min read
PM Modi expresses concern to Iranian President over loss of life in war
13.3.2026
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழி தாக்குதல் நடத்தின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
மேலும், ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். அதோடு, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதலில் கொல்லப்பட்டு உள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருவதுடன், மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்ற நிலை காணப்படுகிறது. கத்தார், ஈராக்கின் குர்திஸ்தான், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், மோதல் தொடங்கிய பிறகு முதல் முறையாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஸ்கியனுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார். இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழல் குறித்து ஈரான் அதிபர் டாக்டர் மசூத் பெசெஸ்கியனுடன் உரையாடினேன். பதற்றங்கள் அதிகரிப்பது, பொதுமக்களின் உயிரிழப்பு மற்றும் உள்கட்டமைப்புக்கு ஏற்படும் சேதம் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்தேன்.
அங்குள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பு, தடையற்ற வர்த்தகம் மற்றும் எரிசக்தி போக்குவரத்து ஆகியவை இந்தியாவின் முதன்மையான முன்னுரிமைகளாக உள்ளன. ஈரான் ஜனாதிபதியுடனான உரையாடலில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் எடுத்துரைத்து, பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்திற்கான தேவையை வலியுறுத்தினேன்.”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.