June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

இமாச்சலப் பிரதேச நிதி நெருக்கடி: தமிழகத்திற்கு அன்புமணி எச்சரிக்கை

1 min read

Himachal Pradesh financial crisis: Anbumani warns Tamil Nadu

23.3.2026
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

இமாச்சல பிரதேசத்தில் நிலவும் மிகக்கடுமையான நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, அம்மாநில அரசு ஊழியர்களுக்கு 30% வரையிலும், முதல்-மந்திரிக்கும், மந்திரிகளுக்கும் 30 முதல் 50% வரையிலும் ஊதியம் தற்காலிகமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. ஒரு மாநிலத்தின் நிதி மேலாண்மை மிக மோசமாக இருந்தால், அந்த மாநிலத்தில் என்னென்ன சீரழிவுகள் ஏற்படும் என்பதற்கு இமாச்சலப் பிரதேச அரசின் நிலை தான் சான்று ஆகும்.

2026-27ஆம் ஆண்டுக்கான இமாச்சலப் பிரதேச அரசின் நிதிநிலை அறிக்கையை அம்மாநில சட்டப்பேரவையில் முதல்-மந்திரி சுக்விந்தர்சிங் சுக்கு தாக்கல் செய்தார். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையின் மதிப்பு 6% முதல் 8% உயர்த்தப்படும் நிலையில், இமாச்சலப்பிரதேச அரசு நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி நிதிநிலை அறிக்கை மதிப்பை 6.12% குறைத்திருக்கிறது. கடந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கை மதிப்பு ரூ.58,514 கோடியாக இருந்த நிலையில், நடப்பாண்டில் அது ரூ.54,928 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமின்றி, நிதி நெருக்கடி காரணமாக அடுத்த 6 மாதங்களுக்கு அம்மாநில முதல்-மந்திரியின் ஊதியம் 50%, மந்திரிகளின் ஊதியம் 30%, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 20% வீதம் குறைக்கப்படும்; அதிகாரிகளில் தலைமைச் செயலாளர், செயலாளர்கள், காவல்துறை தலைமை இயக்குனர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகளின் ஊதியம் 30%, காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் அதற்கும் கீழ் நிலையில் உள்ள அதிகாரிகளின் ஊதியம் 20% குறைக்கப்படும்; அனைவருக்கும் வழங்கப்படும் 3% ஆண்டு ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடைநிலை ஊழியர்களுக்கு மட்டும் ஊதியக் குறைப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. குறைக்கப்படும் ஊதியம் எப்போது மீண்டும் வழங்கப்படும் என்பது குறித்து அறிவிக்கப் படவில்லை. இமாச்சலப் பிரதேச அரசு ஊழியர்களுக்கு இது தாங்க முடியாத பேரிடியாக அமைந்திருக்கிறது.

இமாச்சலப்பிரதேச அரசு கடந்த இரு ஆண்டுகளாகவே அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க நிதியில்லாமல் தடுமாறி வந்தது. பல மாதங்கள் மிகவும் தாமதமாகத் தான் ஊதியம் வழங்கப்பட்டது. இந்த நிலைக்குக் காரணம் அம்மாநில அரசின் மிக மோசமான நிதி மேலாண்மை தான். அரசின் வருமானத்தைப் பெருக்குவதற்கு ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத ஆட்சியாளர்கள், செலவை மட்டும் அதிகரித்ததன் விளைவு தான் இது.

இமாச்சலப் பிரதேச அரசின் நிதிநிலை எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறதோ, அதை விட மோசமான நிலையில் தான் தமிழ்நாட்டின் நிதிநிலை உள்ளது. இமாச்சலப் பிரதேச அரசின் மொத்தக்கடன் ரூ.1 லட்சம் கோடி. அம்மாநில அரசின் நிதிநிலை அறிக்கை மதிப்பு ரூ.58,514 கோடி. நிதிநிலை அறிக்கை மதிப்பை விட கடனின் அளவு 170% அதிகம் ஆகும். ஆனால், அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையின் மதிப்பு ரூ.4 லட்சத்து 52,833.35 கோடி. அதே நேரத்தில் தமிழக அரசின் நேரடிக்கடன் ரூ.10 லட்சத்து 71,770 கோடி. அதாவது தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மதிப்பை விட கடனின் அளவு 237% அதிகம் ஆகும். நிதிநிலை அறிக்கை மதிப்பை விட 170% அளவுக்கு கடன் கொண்ட இமாச்சலப் பிரதேச அரசே 30% வரை ஊதியத்தை குறைக்க வேண்டியிருக்கும் நிலையில், நிதிநிலை அறிக்கை மதிப்பை விட 237% கூடுதல் கடன் வைத்திருக்கும் தமிழகத்தின் நிலை என்னவாகும்? என்பதை யோசித்தால் தெளிவு பிறக்கும்.

திமுக அரசு தொடர்ந்து மூடி மறைத்து வரும் ஓர் உண்மை என்னவென்றால், அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தையே கடன் வாங்கித் தான் வழங்கி வருகிறது என்பதைத் தான். ஒரு மாநில அரசு அதன் வருவாய் வரவுகளுக்குள் வருவாய் செலவுகளை கட்டுப்படுத்துவதுதான் சிறந்த நிதி மேலாண்மை ஆகும். 2025-26ஆம் ஆண்டில் தமிழக அரசின் மொத்தம் வருவாய் வரவுகள் ரூ.3,09,698 கோடி ஆகும். இதில் மானியங்களுக்கு ரூ.1,59,486.87 கோடி, வட்டி செலுத்த ரூ.70,753.99 கோடி, பிற நிலையான செலவுகளுக்கு ரூ.16,921.78 கோடி என 2,47,162.64 கோடியை செலவு செய்தது போக அரசிடம் ரூ.62,535 கோடி மட்டும் தான் மீதமிருக்கும்.

ஆனால், அரசு ஊழியர்களுக்கு ஊதியமாக ரூ.90,463.98 கோடி, ஓய்வூதியமாக ரூ.41,290.40 கோடி என ரூ.1,31,754.38 கோடி வழங்கப்பட வேண்டும். அரசிடம் ரூ.62,535 கோடி மட்டுமே உள்ள நிலையில், மீதமுள்ள தொகையை கடன் வாங்கித் தான் திமுக அரசு வழங்கியது. அதனால் தான் கடந்த ஆண்டில் ரூ.69,219 கோடி வருவாய்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சியின் 5 ஆண்டுகளிலும் இது தான் நடந்திருக்கிறது. அதனால் தான் திமுக ஆட்சியில் தமிழகத்தின் நேரடிக் கடன் ரூ.9,52,374 கோடியாக அதிகரித்திருக்கிறது.

இந்த அவல நிலைக்கு காரணம் திமுக அரசின் மோசமான நிதி மேலாண்மை தான். திமுக அரசைப் பொறுத்த வரை ஊழல் செய்வதில் அலிபாபாவும் 40 திருடர்களைப் போலவும், நிர்வாகம் செய்வதில் பரமார்த்த குருவும் அவரது சீடர்களைப் போலவும் செயல்பட்டு வருகிறது. அதனால் தான் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. இதே நிலை நீடித்தால் அடுத்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டிலும் அரசு ஊழியர்களின் மாத ஊதியத்தை 30% முதல் 50% வரை குறைக்க வேண்டியிருக்கும்.

இந்த நிலை மாற வேண்டும் என்றால், அரசின் வருவாயைப் பெருக்கி, தேவையற்ற செலவுகளை குறைக்க வேண்டும். நிர்வாகத் திறன் இல்லாத திமுக அரசால் அதை செய்ய முடியாது. இதை நன்கு உணர்ந்திருக்கும் தமிழ்நாட்டு மக்கள் வரும் தேர்தலில் திமுகவை வீட்டுக்கு அனுப்புவார்கள். அதன் பின்னர் அமையவுள்ள புதிய அரசின் தமிழ்நாட்டின் நிதிநிலையை மேம்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *