ரூ.2 லட்சத்திற்கு முத்திரைத்தாள் வாங்க பான் கார்டு எண் கட்டாயம்
1 min read
PAN card number is mandatory to buy stamp paper worth Rs. 2 lakh
23.3.2026
தமிழ்நாடு முழுவதும் ரியல் எஸ்டேட் துறை தற்போது கொடிகட்டி பறக்கிறது. அதிக அளவிலான நிலங்களை வாங்கி பிளாட்டுகளாக போட்டு விற்பனை செய்ய பெரிய நிறுவனங்கள் வந்துள்ளன. ஆனால், இதுபோன்று சொத்துகள் வாங்குவதில் கருப்பு பணப்புழக்கம் அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை வருமான வரித்துறை எடுத்து வருகிறது.
அந்த வகையில், சொத்து பரிமாற்றத்தில் ரொக்கமாக பணத்தை பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது. இதில், கையாளப்படும் தொகை முழுவதும், வங்கி கணக்குகள் வாயிலாக செல்ல வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பத்திரத்தில் குறிப்பிடப்படும் தொகையை மட்டுமே, வங்கிகள் வாயிலாக மக்கள் கைமாற்றுகின்றனர். அதற்கு மேற்பட்ட தொகையை ரொக்கமாக கொடுக்கின்றனர். அதாவது, பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட நிலத்தின் வழிகாட்டி மதிப்பு தொகையை மட்டுமே வங்கிகள் மூலம் கொடுக்கின்றனர். ஆனால், கூடுதலான மார்க்கெட் விலையை ரொக்கமாகவே கொடுக்கின்றனர்.
இதை கட்டுப்படுத்தும் வகையில், புதிய நடவடிக்கைகளை வருமான வரித்துறை எடுத்து வருகிறது. அந்த வகையில், புதிய வருமான வரி சட்டத்தின் அடிப்படையில், புதிய விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், சொத்து பரிமாற்றம் விஷயத்தில் புதிய கட்டுப்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
அதன்படி, ரூ.1 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்புகளில் யார் முத்திரைத்தாள் வாங்கினாலும், அவர்களின் விவரங்களை ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் இந்தியா நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகிறது.
இதேபோல், ரூ.2 லட்சம் மற்றும் அதற்கு மேல் முத்திரைத்தாள் வாங்க பான் கார்டு எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உயர் மதிப்பு முத்திரைத்தாள்கள் வாங்குவோர் விவரங்கள் அனைத்தும் வருமான வரித்துறையின் பார்வைக்கு செல்லும் வகையில் விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஏப்ரல் 1-ந் தேதி முதல் இந்த விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. இதனால், முத்திரைத்தாள் வாயிலாகவும், சொத்து பரிமாற்றங்கள் குறித்த விவரங்கள் வருமான வரித்துறை பார்வைக்கு வர உள்ளன.