சட்டசபைத் தேர்தல் புதுச்சேரி, கேரளம், அசாமில் வேட்பு மனுதாக்கல் முடிந்தது
1 min read
Nomination filing ends in Puducherry, Kerala, Assam for assembly elections
23.3.2026
அசாம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் ஏப்ரல் 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 16-ந்தேதி தொடங்கியது. 30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரியில் கடந்த 18-ந்தேதி 12 பேரும், 19-ந்தேதி 5 பேரும் மனுதாக்கல் செய்தனர். 20-ந்தேதியன்று ஒரே நாளில் 114 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதில் முதல்-அமைச்சர் ரங்கசாமி மங்கலம், தட்டாஞ்சாவடி என 2 தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்தார். இதுதவிர பா.ஜனதா காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்களும் மனுதாக்கல் செய்தனர். இதுவரை 135 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
வேட்பு மனுதாக்கல் செய்ய இன்று (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். இன்று இந்த மாநிலத்தில் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்தது. கடைசி நாளான இன்று பலர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதேபோல் 126 உறுப்பினர்களை கொண்ட அசாம் மாநில சட்டசபைக் கும் ஏப்ரல் 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இங்கு பா.ஜனதா கூட்டணிக்கும், காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
அம்மாநில பா.ஜனதா முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா, ஜலுக்பாரி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் கடந்த 20-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். இன்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் 6 கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் காங்கிரஸ், தனது வேட்பாளர் பட்டியலை நேற்றுதான் இறுதி செய்தது.
கேரளம் மாநிலத்தில் உள்ள 140 சட்டசபை தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 9-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் இன்றுடன் முடிவடைந்தது.
இந்த தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையில் ஒரு அணி, காங்கிரஸ் தலைமையில் ஒரு அணி, பா.ஜனதா சார்பில் மற்றொரு அணி என மும்முனை போட்டி நிலவுகிறது.
தேர்தலில் போட்டியிட நேற்று வரை 362 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று கடைசிநாள் என்பதால் பலர் வேட்புமனுதாக்கல் செய்தனர்.
வேட்பு மனு மீதான பரிசீலனை நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற வருகிற 26-ந்தேதி (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும்.