போரினால் ஈரானுக்கு லாபம்- எண்ணெய் விற்பனை மூலம் ஒரு நாளைக்கு ரூ.1,160 கோடி வருமானம்
1 min read
Iran benefits double from war – Rs 1,160 crore per day in revenue from oil sales
27/3/2026
ஈரான் – இஸ்ரேல், அமெரிக்கா இடையே கடந்த பிப்ரவரி 28 முதல் சுமார் 1 மாத காலமாக போர் நடந்து வருகிறது.
இதனால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டு எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி பாதிக்கப்பட்டு பல உலக நாடுகள் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளன.
உலகின் 20 சதவீத எண்ணெய் தேவையை பூர்த்தி செய்து வந்த ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியே எதிரிகள் மற்றும் அவர்களை ஆதரிக்கும் நாடுகளின் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி மறுத்து வருகிறது.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஈரான் கப்பல்கள் மட்டுமே தடையின்றி செல்ல முடிவதால், சர்வதேச அளவில் உயர்ந்துள்ள கச்சா எண்ணெய் விலையினால் ஈரான் பெரும் லாபமடைந்து வருகிறது.
குறிப்பாக சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஈரான் தொடர்ந்து கச்சா எண்ணெயை விற்பனை செய்து வருகிறது.
போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 டாலரைத் தாண்டியுள்ளது. இந்த விலை உயர்வு ஈரானின் பொருளாதாரத்திற்குச் சாதகமாக அமைந்துள்ளது.
இதனால் போர் தொடங்குவதற்கு முன்பு இருந்ததை விட தற்போது ஈரான் இரட்டிப்பு வருவாயைப் பெற்று வருகிறது.
ஈரான் தற்போது எண்ணெய் விற்பனை மூலம் ஒரு நாளைக்கு சுமார் 139 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,160 கோடி) வருவாய் ஈட்டி வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
போர் தொடங்குவதற்கு முன்பு ஒரு நாளைக்கு சுமார் 16 லட்சம் பேரல்கள் ஏற்றுமதி செய்த ஈரான், தற்போதும் அதே அளவு ஏற்றுமதியை தொடர்கிறது.
ஈரானின் கார்க் தீவு முனையத்தில் எண்ணெய் ஏற்றும் பணிகள் தடையின்றி நடந்து வருகின்றன.
இதனால் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நாள்தோறும் வான்வழித் தாக்குதல்களை நடத்தினாலும், தனது பொருளாதாரத்தின் உயிர்நாடியான எண்ணெய் வணிகத்தை ஈரான் திறம்பட நிர்வகித்து வருகிறது.
எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஈரான் மீதான சில தடைகளை அமெரிக்கா தற்காலிகமாக நீக்கியுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஈரானின் லாபத்தை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.