June 15, 2026

Seithi Saral

Tamil News Channel

பட்டியல் இனத்தவர் இந்து மதத்திற்கு திரும்பினால் எஸ்.சி., அந்தஸ்து கிடைக்க நிபந்தனைகள்

1 min read

Conditions for getting SC status if a Scheduled Caste person converts to Hinduism

26.3.2026
‘இந்து, சீக்கியர், பவுத்த மதத்தை தவிர, பிற மதத்துக்கு மாறியவர்கள் பட்டியலின அந்தஸ்தை உடனடியாக இழப்பர்’ என, உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கிய நிலையில், ‘மீண்டும் தாய் மதம் திரும்பி அந்த அந்தஸ்தை பெறுவதற்கு வலுவான ஆதாரங்களை நிரூபிக்க வேண்டும்’ என அறிவுறுத்தியுள்ளது.

ஆந்திராவை சேர்ந்த சின்தடா ஆனந்த் என்பவர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறி போதகரான நிலையில், ஜாதி ரீதியில் துன்புறுத்தும் ராமிரெட்டி என்பவர் மீது எஸ்.சி., – எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தொடர்ந்தார்.

ஆந்திர உயர் நீதிமன்றம் இவ்வழக்கை தள்ளுபடி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.சமீபத்தில் இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, மன்மோகன் அடங்கிய அமர்வு, ‘இந்து, சீக்கியர் அல்லது பவுத்தம் தவிர, பிற மதத்தினர் பட்டியலின அந்தஸ்து கோர முடியாது.

‘வேறு மதத்திற்கு மாறும்போது, அதுவரை அனுபவித்து வந்த பட்டியலின அந்தஸ்தை அவர்கள் உடனடியாக இழப்பர். இது, கடந்த 1950ல் பட்டியலின வகுப்பு தொடர்பான அரசியல் சாசன உத்தரவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது’ எனக்கூறி அதிரடி தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில், இந்த தீர்ப்பின் முழு விபரமும் நேற்று வெளியானது. அதில், பிற மதத்திற்கு மாறியவர்கள் மீண்டும் தாய் மதம் திரும்பி பட்டியலின அந்தஸ்து பெற வேண்டுமெனில், மூன்று ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என விளக்கிஉள்ளது.

இந்து, சீக்கியர் அல்லது பவுத்த மதத்திற்கு மீண்டும் மாறிய நபர், துவக்கத்தில் 1950ல் பட்டியலின வகுப்பு தொடர்பான அரசியல் சாசன உத்தரவின் கீழ் அறிவிக்கப்பட்ட ஜாதியில் தான் பிறந்தார் என்பதற்கான தெளிவான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

மாறிய மதத்தை முழுதாக துறந்துவிட்டு, மீண்டும் தாய் மதம் திரும்பியதற்கான நம்பகமான சான்றுகள் இருக்க வேண்டும். மேலும் அவர் தன் பழைய ஜாதியின் சடங்குகள், பழக்கவழக்கங்கள், வழிபாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

தாய் மதம் திரும்பியதை, சம்பந்தப்பட்ட சமூகத்தினர் ஏற்றுக் கொண்டதற்கான சான்று இருக்க வேண்டும். மாற்று மதத்தில் இருந்து தாய் மதம் திரும்பிவிட்டதாக ஒருவர் சுயமாக அறிவித்துக் கொள்வது மட்டும் போதாது. அசல் சமூக மக்கள் அவரை தங்களது சமூகத்தை சேர்ந்தவராக அங்கீகரிப்பது மிகவும் முக்கியமானது. இதில் ஒரு ஆதாரத்தை சமர்ப்பிக்க தவறினாலும், மீண்டும் பட்டியலின அந்தஸ்தை அந்த நபரால் கோர முடியாது என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்திஉள்ளது.
பழங்குடியினர் விவகாரத்தில் மதமாற்றம் பெரிய தடையாக இல்லை. அதாவது, அவர் மாற்று மதத்திற்கு மாறினாலும், பழங்குடியின அந்தஸ்தை உடனடியாக இழக்க மாட்டார். இருந்தாலும், மதம் மாறியவர்கள் பழங்குடியின மரபுகள், சடங்குகள், பழக்கவழக்கங்கள் மற்றும் கலாசார விழுமியங்களை பின்பற்றி வாழ்கின்றனரா என்பதை நிரூபிக்க வேண்டும். மேலும், பழங்குடியின சமூகத்தவரால் ஏற்கப்பட்டவராக இருக்க வேண்டும் என, இரு நிபந்தனைகளை உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *