கடையநல்லூரில் மதிமுக வேட்பாளர் ராஜேந் திரன் வேட்பு மனு தாக்கல்
1 min read
MDMK candidate Rajendhiran files nomination in Kadayanallur
6.4.2026
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் வழக்கறிஞர் தி.மு.இராசேந்திரன் ஜனநாயக முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளுடன் தேர்தல் அலுவலகத்தில் இருந்து தாலுகா அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேந்திரனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் மதிமுக வேட்பாளராகிய நான்
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறேன்.
இன்று மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன். கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்காள பெருமக்கள் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை அமோக வெற்றி பெறச் செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
கடையநல்லூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக என்னை வெற்றி பெறச் செய்தால் கடையநல்லூர், தொகுதிக்குட்பட்ட அனைத்து தரப்பு மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தர அயராது பாடுபடுவேன்.
கடையநல்லூர் தொகுதி மக்கள் என்னை எளிதாக அணுகும் வகையில் கடையநல்லூர் நகரப் பகுதியில் மக்கள் தொடர்பு அலுவலகம் திறக்கப்படும் . மேலும் கடையநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட செங்கோட்டை நகராட்சி பகுதியிலும் ஒரு கிளை அலுவலகம் செயல்படும். இந்த இரண்டு அலுவலங்களிலும் பொதுமக்கள் தங்களது குறைகளை கோரிக்கைகளை நேரடியாக எடுத்துச் சொல்லலாம்.
மேலும் கடையநல்லூர், செங்கோட்டை, பண்பொழி, வடகரை, அச்சன்புதூர், மேக்கரை, சொக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகளிடமிருந்து விவசாய நிலங்களை பாதுகாக்கும் வகையில் தேவையான பணிகள் மேற்கொள்வேன்.
தென்னை, மா, வாழை மரங்களுக்கு மத்திய மாநில அரசுகள் காப்பீட்டுத் தொகையை செலுத்தி வனவிலங்குகளால் சேதம் ஏற்படும் பொழுது அதற்கு உரிய இழப்பீடு வழங்கச் செய்தல் காட்டுப்பன்றியை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க உரிய நடவடிக்கை மேற்கொள்வேன்.
காட்டு விலங்குகளால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் உயிருக்கு சேதம் ஏற்படுகின்ற பொழுது பெரிய அளவில் அதற்கான நீதிஉதவி வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்வேன்.
கடையநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார், உள்ளிட்ட அணைகள் மற்றும் கால்வாய்களை தூர்வாரி பராமரிப்பதற்கு தேவையான அழுத்தத்தை அரசுக்கு கொடுத்து அப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
வெளிநாடு வாழ் தமிழர்கள் யாரேனும் பாதிக்கப்பட்டால் அது குறித்த விபரம் உடனடியாக வைகோ அவர்களுக்கும் துரை வைகோ அவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மூலம் மத்திய அரசிடம் வலியுறுத்தி தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதற்கான அலுவலகம் எனது சட்டமன்ற அலுவலகத்தில் செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின் போது தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் தலைமை செயற்குழு உறுப்பினருமான மா. செல்லத்துரை, தலைமை செயற்குழு உறுப்பினர் வடகரை பேரூராட்சி மன்ற தலைவர் சேக் தாவூது, கடையநல்லூர் முன்னாள் நகர் மன்ற தலைவர் டாக்டர் சஞ்சீவி, தென்காசி வடக்கு மாவட்ட மறுமலர்ச்சி திமுக செயலாளர் இல.சுதாபாலசுப்பிரமணியன், தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வல்லம் மு.ஷேக் அப்துல்லா, ஆகியோர் கலந்து கொண்டனர்.