June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

வருகிற 10-ம் தேதி முதல் டோல்கேட்களில் ரொக்கம் பெறப்படாது

1 min read

Cash will not be accepted at toll gates from the 10th

7.4.2026
வரும் 10ம் தேதி முதல், சுங்கச்சாவடிகளில் பணப் பரிவர்த்தனைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) நீக்க உள்ளதால், இந்தியா முழுவதும் நெடுஞ்சாலைப் பயணம் முழுமையாக டிஜிட்டல் மயமாக உள்ளது. இந்தப் புதிய விதிமுறையுடன், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கக் கட்டண விலக்குகளையும் கடுமையாக்கி, பாஸ்டேக் ஆண்டுப் பயண அட்டையை (FASTag Annual Pass) பரவலாகப் பயன்படுத்த ஊக்குவிக்கிறது. இதன் மூலம், அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு டிஜிட்டல் நெடுஞ்சாலைப் பயணம் வேகமாகவும், தடையின்றியும் அமையும் என்று கூறப்படுகிறது.
நாடு முழுதும் கிட்டத்தட்ட 1,200 சுங்க சாவடிகள் உள்ளன. தினசரி பாஸ்டேக் பரிவர்த்தனைகள் மூலம் 1.16 கோடி கிடைக்கிறது. 2025-26ல் இவற்றின் சுங்க வசூல் 82,900 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில்நெடுஞ்சாலை சுங்க சாவடிகளில் ரொக்கம் செலுத்தும் முறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இது ஏப்ரல் 10ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

இதுதொடர்பாக மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

சுங்க சாவடிகளில் ரொக்கமாக கட்டணம் செலுத்தும் நடைமுறை ரத்து செய்யப்படுகிறது. இதற்காக விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 10ம் தேதி முதல் சுங்க சாவடி பரிவர்த்தனைகள் அனைத்தும் பாஸ்டேக், மின்னணு முறைகளில் மட்டுமே நடைபெறும். சுங்க சாவடியை கடக்கும் வாகனங்களில் பாஸ்டேக் வசதி இல்லை என்றால், யு.பி.ஐ., பயன்படுத்தி சுங்க கட்டணம் செலுத்தலாம். ஆனால், வழக்கமான கட்டணத்தைவிட 1.25 மடங்கு கூடுதலாக பணம் செலுத்த வேண்டும்.

குறிப்பிட்ட வாகனம், டிஜிட்டல் வடிவிலும் கட்டணம் செலுத்தாவிட்டால் சுங்கச்சாவடிக்குள் வருவதையோ, வெளியே செல்வதையோ அதிகாரிகள் அனுமதிக்க மறுக்கலாம். அப்போது மின்னணு முறையில் அறிவிப்பு ஒன்று வாகன உரிமையாளருக்கு அனுப்பப்படும். மூன்று நாட்களுக்குள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையை செலுத்திவிட வேண்டும். இல்லாவிட்டால், சுங்க கட்டணத்தை போல இரு மடங்கு தொகையை செலுத்த வேண்டியிருக்கும். அரசு அலுவலக நிமித்தமான பயணம் மேற்கொள்ளும் வாகனங்களுக்கு, சுங்க கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இந்த கட்டண விலக்கு பெற முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும் அல்லது ஆண்டுக்கான பாஸ் பெற்று கொள்ளலாம். அரசு வாகனங்களுக்கு மட்டுமே கட்டண விலக்கு பொருந்தும். தனிப்பட்ட முறையில் அரசு அதிகாரிகள் மேற்கொள்ளும் தனிப்பட்ட பயணங்களுக்கு கட்டண விலக்கு கிடையாது. அடையாள அட்டையை பரிசோதித்து அனுமதிக்கும் நடைமுறை இனி கிடையாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாக்ஸ்
பாஸ்டேக் ஆண்டுக்கான பாஸ் விண்ணப்பிப்பது எப்படி ?
வாகன ஓட்டிகள், ராஜ்மார்க் யாத்ரா செயலி போன்ற டிஜிட்டல் தளங்கள் மூலமாகவும், அத்துடன் NHAI மற்றும் MoRTH-இன் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலமாகவும் பாஸ்டேக் ஆண்டு பாஸிற்கு விண்ணப்பிக்கலாம் அல்லது புதுப்பிக்கலாம்.

பாஸைச் செயல்படுத்த, பயனர்கள் தங்களின் பாஸ்டேக் உடன் இணைக்கப்பட்ட கணக்கில் உள்நுழைந்து, வாகனப் பதிவு விவரங்கள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு, UPI, டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் அல்லது நெட் பேங்கிங் மூலம் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தப்பட்ட பிறகு, பாஸ் தானாகவே பாஸ்டேக்குடன் இணைக்கப்பட்டு, பொதுவாக 24 மணி நேரத்திற்குள் செயல்படத் தொடங்கிவிடும். இது ஒரு வருடம் அல்லது 200 சுங்கச்சாவடி கடப்புகள் வரை செல்லுபடியாகும் காலத்தை வழங்குகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *