தென்காசி: கைதியின் உடலை எரித்த வழக்கில் அதிகாகர்கள், போலீசார் 13 பேர் விடுதலை
1 min read
Tenkasi: 13 officers, police officers acquitted in prisoner’s body burning case
7.4.2026
விசாரணையின் போது உயிரிழந்த கைதியின் உடலை எரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் போலீஸ் அதிகாரிகள் உள்பட 13 பேரை விடுதலை செய்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
தென்காசி மாவட்டம் கடைய நல்லூர் பகுதியை சேர்ந்தவர் மசூது (வயது 46). இவர் கடந்த 2006-ம் ஆண்டு குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக கூறி ஆரல்வாய்மொழி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
போலீஸ் விசாரணையின் போது மசூது உயிரிழந்ததாக வும் அவரது உடலை யாருக்கும் தெரியாமல் போலீசாரே எரித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மசூதை காணவில்லை எனக்கூறி அவரது மனைவி அசனம்மாள் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து இது தொடர்பாக கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். நீண்ட நாட்களாக மசூது கிடைக்காத காரணத்தினால் இந்த வழக்கை சி. பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையின் போது, மசூது உயிருடன் இல்லை என தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார், 11 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
அதாவது, சம்பவம் நடந்த போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய 13 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டனர்.
இந்த வழக்கின் விசாரணை தென்காசி கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்டு தற்போது போலீஸ் அதிகாரிகளாக இருக்கும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரதாப் சிங், சென்னை அண்ணாநகரில் துணை கமிஷனராக இருக்கும் ஈஸ்வரன், துணை சூப்பிரண்டு சந்திரபால், இன்ஸ்பெக்டர் லட்சுமணராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சத்யராஜ், தலைமைக்காவலர் ரத்தினசாமி, போலீஸ்காரர்கள் பாஸ்கரன், மைக்கேல், முத்து, ஸ்டீபன், முரு கன்,மாடசாமி, பரமசிவன் ஆகிய 13 போலீஸ்காரர்கள் மீதும் குற்றச்சாட்டுக்கு போதிய சாட்சிகள் இல்லாத காரணத்தால் அனைவரையும் விடுதலை செய்வதாக அறிவித்தார்.