வெங்காயம் கொள்முதல் விலை ரூ.16.50 ஆக உயர்வு- மத்திய அரசு அறிவிப்பு
1 min read
Onion procurement price raised to Rs 16.50 – Central Government announcement.
13.6.2026
வெங்காயம் கொள்முதல் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தற்போது வெங்காயம் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.15.80 ஆக உள்ளது. அதை ரூ.30 ஆக உயர்த்த வேண்டும் என்று நாட்டிலேயே அதிகமாக வெங்காயம் விளைவிக்கப்படும் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுபற்றி விவாதிக்க மத்திய உணவுத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தலைமையில் நுகர்வோர் விவகாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், வெங்காயம் கொள்முதலை வலுப்படுத்துவது பற்றியும், விவசாயிகளுக்கு அதிக வருவாயை உறுதி செய்வது பற்றியும் விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் விவசாயிகளின் வருவாயை பெருக்குவதற்காக வெங்காயம் கொள்முதல் விலையை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதுகுறித்து மத்திய உணவுத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
வெங்காய மண்டி விலை மற்றும் தரம்வாய்ந்த வெங்காயத்தின் தேவை அடிப்படையில், வெங்காயத்துக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை கிலோ ரூ.16.50 ஆக உயர்த்தப்படுகிறது. ஜூன் 13-ம் தேதியில் இது அமலுக்கு வருகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அதன்படி இன்று முதல் கொள்முதல் விலை உயர்வு அமலுக்கு வந்தது.
நடப்பு பருவத்துக்கான வெங்காயம் கொள்முதல் கடந்த மாதம் 15-ம் தேதி தொடங்கியது. கடந்த நிதியாண்டில் 3 லட்சம் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் நடப்பு நிதியாண்டில் 2 லட்சம் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.