June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

தேர்தல் பிரசாரத்தில் தொண்டர் கன்னத்தில் அடித்த திருமாவளவன்

1 min read

Thirumavalavan slapped a volunteer on the cheek during the election campaign

9.4.2029
தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற (தனி) தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சி போட்டியிடுகிறது. இந்த கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதற்காக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பெரியகுளம் வந்தார். அவர் திறந்த வாகனத்தில் இருந்தவாறு நகரின் முக்கிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.

அப்போது அவர் வந்த பிரசார வாகனத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சிலர் ஏறி அவரை பேச விடாமல் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டனர்.

அப்போது திருமாவளவன் அவர்களை கீழே இறங்குமாறு பலமுறை கூறியும், அவர்கள் தொடர்ந்து வாகனத்தில் ஏறி அவரை பேசவிடாமல் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தினர். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து ஆத்திரம் அடைந்த திருமாவளவன் வாகனத்தின் மீது ஏற முயன்ற தொண்டர்கள் கன்னத்தில் பளார் பளார் என அறைந்தார். மேலும் கடும் கோபமாக நான் பேசவா? வேண்டாமா? என்று கேட்டு அவர்களை வாகனத்தில் இருந்து கீழே இறங்குமாறு கண்டித்தார்.

அதனைத் தொடர்ந்து அடித்தும் ஒரு சிலர் வாகனத்தை விட்டு இறங்காமல் இளைஞர்கள் அவர் பேசும்போது பின்னால் நின்று கொண்டு கூச்சலிட்டவாறு இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து அவர் பேசி முடித்த நிலையில் பழைய பஸ் நிலையத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பார் என எதிர்பார்த்து அக்கட்சி தொண்டர்கள் காத்திருந்தனர். ஆனால் தொண்டர்கள் ரகளையால் அவர் மாலை அணிவிக்காமல் சென்று விட்டார்.

அப்பகுதியில் விடுதலைச் சிறுத்தை கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் குத்துப்பாட்டு போட்டு மது போதையில் சாலையில் நடனம் ஆடினர்.

மேலும் பெரியகுளம் – மதுரை சாலை, மற்றும் பெரியகுளம் – தேனி சாலையில், வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பி விட்டதால் 2 மணி நேரத்துக்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தங்கதமிழ்செல்வன் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமாவளவன் தொண்டர்களின் கன்னத்தில் அறைந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *