நெல்லுக்கு ஊக்கத்தொகை அளிப்பதை நிறுத்த மத்திய அரசு கடிதம்: ஸ்டாலின் குற்றச்சாட்டு
1 min read
Central government letter to stop providing incentives for paddy: Stalin’s allegation
10/6/2026
நெல்லுக்கு அளித்து வரும் ஊக்கத்தொகையை நிறுத்தக்கோரி மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளது என்று தஞ்சாவூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தஞ்சாவூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: –
100 சதவீதம் வெற்றியை கொடுங்கள். தஞ்சாவூர் வளர்ச்சியை யாராலும் தடு-க்க முடியாது. நிறைய பணிகள் செய்த காரணத்தினால், கம்பீரமாக, தைரியமாக, திமிராக வந்து நிற்கிறேன்.இபிஎஸ், ஓனர் பாஜ அரசு, தமிழக அரசுக்கு அனுப்பிய கடிதத்தை அதிகாரிகள் காட்டினர். இப்படிக்கூட ஒருவரால் யோசிக்க முடியுமா என்பது போல் அந்தக் கடிதம் அமைந்துள்ளது.
அதில், தமிழக அரசு வழங்கும் ஊக்கத்தொகையால் நெல் உற்பத்தி பெருகி வருகிறது. இதனால் நிறைய பிரச்னை வருகிறது. இதனால் நெல்லுக்கு அளித்து வரும் ஊக்கத்தொகை நிறுத்த வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.
நெல்லுக்கு அளித்து வரும் ஊக்கத்தொகையை நிறுத்தக்கோரி கடிதம் அனுப்பி உள்ளனர். இதற்கு பாஜவை இபிஎஸ் கண்டிப்பாரா? வெட்கம் சூடு சொரணை இருந்தால் கண்டிப்பாரா?
4 ஆண்டு காலம் போலி விவசாயியாக இருந்த இபிஎஸ் ஆட்சியில், நெல்லுக்கு வழங்கும் ஊக்கத்தொகையை ரூ.1 கூட உயர்த்தவில்லை. பச்சை துண்டு போட்டுக் கொண்ட இபிஎஸ் பச்சைத் துரோகம் தான் செய்தார். பாஜவும், அதிமுகவும் சேர்ந்த நெல் விலையை உயர்த்துவதை தடுக்க என்ன செய்தாலும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முறியடிப்பார் உலகத்துக்கே உணவு அளிக்கும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்வேன். முடிந்தால் தடுத்துப்பாருங்கள்.
இபிஎஸ் ஆட்சியில் செய்தது வேதனைதான். இபிஎஸ் , விவசாயிகளுக்கு செய்த துரோகத்தை சொல்ல ஒரு நாள் போதாது. காவிரி காப்பாளன் என தனக்கு தானே அறிவித்து கொண்டார். விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்தால், வேளாண் சட்டத்திற்கு ஆதரவு அளித்திருப்பாரா? போராடிய விவசாயிகளை கொச்சைப்படுத்தினார்.
சிலிண்டர் தட்டுப்பாட்டால் பல உணவகங்கள் மூடிவிட்டனர். சில உணவுகள் மட்டுமே தயாரித்து வருகின்றனர். அவசர ஆலோசனை கூட்டத்தை மோடி கூட்டியும் ஒன்றும் பேச முடியவில்லை.
பாஜ ஆளாத மாநிலங்களில் அதிகாரிகளை பந்தாடுவதில் கவனம் செலுத்த முயன்றனர். எஸ்ஐஆர் மூலம் கோடிக்கணகான வாக்குரிமையை பறித்துள்ளனர்.தமிழகத்தில் தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளை நியமித்து தில்லுமுள்ளு நடத்த முயல்கின்றனர். எத்தனையோ தேர்தல்களை தமிழகம் பார்த்துள்ளது.
அமைதியான தேர்தலுக்கு தமிழகம் தான் சிறந்த உதாரணம்.அப்படிப்பட்ட நமது மாநிலத்தில் முதல்முறையாக தேர்தலை காரணம் காட்டி தலைமை செயலர் மற்றும் அதிகாரிகளை மாற்றிவிட்டனர்.
மக்களே திராவிட மாடல் 2.0 என முடிவு செய்துவிட்டனர்.இதனை பாஜ , தேர்தல் கமிஷன் உணரவில்லை. 2021 ல் ஸ்டாலினுக்கு முதல்வர் ஆகும் யோகம் இல்லை என்றனர். யோகத்தை நம்பி சும்மா இருப்பவனா இந்த ஸ்டாலின்.அதிர்ஷ்டம் இல்லை என அலுத்துக்கொள்கிறவனா இந்த ஸ்டாலின். நான் யோகத்தை நம்புகிறவன் அல்ல. உழைப்பை நம்புகிறவன். கருணாநிதியின் உழைப்பை கற்றுக் கொண்ட மாணவன் நான்.
இந்த தேர்தலின் போது, திமுகவில் யாரும் தொடர்ந்து 2 முறை முதல்வர் ஆனவர் இல்லை. போன முறை நீங்கள் கூறியதை உடைத்து முதல்வர் ஆனேன். 2வது முறை இல்லை என்று சொல்கிறார்கள். அதனை உடைக்கிறேன் பாருங்கள். அனைத்தையும் உடைத்து அதிக தொகுதிகளில் வென்று ஆட்சிக்கு வருவோம்.
எதிரிகள் வெட்டிக்கதை பேசிவிட்டு கனவு காண்கிறார்கள். நாம் தமிழகத்தை முன்னேற்றும் கனவு காண்போம். 10 ஆண்டு தொடர்ந்து ஆளும் வாய்ப்பு தமிழகம் கிடைக்கும். கிடைத்தால், தமிழகம் வளர்ச்சி எப்படி இருக்கும் என 2031 ல் காட்டுவோம்.
ஸ்டாலின் போய் சேர வேண்டும் என அடிமனதில் இருப்பதை, வக்கிரங்களை இபிஎஸ் பேச ஆரம்பித்துவிட்டார். மரணம் ஒரு நாள் அனைவருக்கும் வரும். எனக்கும் வரும். ஆனால், ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்கள் தமிழகத்தில் நிலைத்து நிற்கும். தலைசிறந்த தமிழகத்தை, தலைநிமிர்ந்த தமிழகத்தை உருவாக்க சக்தியை மீறி உழைப்பேன். திமுக, ஸ்டாலின் இருக்கும் வரை இபிஎஸ் கனவு நடக்காது.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.