பழையகுற்றாலத்தில் சீராக தண்ணீர் விழுந்தும் குளிக்க அனுமதி மறுப்பு
1 min read
Permission to bathe denied at Old Courtallam despite steady water flow
4.8.206
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்து வரும் நிலையில் பழைய குற்றாலம் அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்க மறுப்பது ஏன்? இதனால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துவருகின்றனர்.
குற்றாலத்தில் கடந்த ஒரு வார காலமாக சாரல் மழை பெய்து வருவதால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி, உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுகிறது. சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து வருகிறார்கள்.
அதே நேரத்தில் பழைய குற்றாலம் அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் கடந்த மூன்று நாட்களாக குளிக்க அனுமதிக்கப்படவில்லை இதனால் சுற்றுலா பயணிகள் கடும் ஏமாற்றம் அடைந்து வருகிறார்கள்.
குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் இரவும் பகலும் குளித்து மகிழ்ந்து வரும் நிலையில் பழைய குற்றாலத்தில் மட்டும் வனத்துறையினரின் தலையீடு காரணமாக காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மட்டும் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
மேலும் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டாலும் தண்ணீர் வரத்து குறைந்த உடன் உடனடியாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஆனால் பழைய குற்றாலம் அருவியில் மட்டும் ஒருமுறை தண்ணீர் வரத்து அதிகரித்தால் தொடர்ந்து மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு வனத்துறையினர் சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதிப்பது இல்லை.கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மறுநாள் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி சிற்றருவி, உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் பழைய குற்றாலம் அருவியில் மட்டும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்றுவரை சுற்றுலாப் பயணிகளை குளிக்க அனுமதிக்கவில்லை. பழைய குற்றாலத்திலும் சனிக்கிழமை முதல் இன்று வரையில் தண்ணீர் சீராக விழுந்த நிலையிலும் பழைய குற்றாலம் நுழைவு வாயிலை பூட்டி வைத்து பொதுமக்களை சுற்றுலா பயணிகளை அருவிப்பக்கம் செல்வதற்கு கூட விடாமல் தடுத்து வருகின்றனர்.
பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் அதிகமாக விழுந்தாலும் குறைவாக விழுந்தாலும் அதனை படம் எடுத்து வெளியிட பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சியாளர்களைக் கூட அனுமதிக்க மறுக்கிறார்கள். நாள்தோறும் காலை முதல் மாலை வரை வனத்துறையினர் அமைத்துள்ள நுழைவு வாயில் அருகே ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் காத்திருந்த போதிலும் அதனை வனத்துறையினர் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து குளிக்க அனுமதி மறுக்கிறார்கள்.
இதே நிலை நீடித்தால் பழைய குற்றாலம் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிடும். சிறந்த சுற்றுலாத்தலமான பழைய குற்றாலத்தை சுற்றுலா வரைபடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டு விடும்.
முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரால் உருவாக்கப்பட்ட பழைய குற்றாலம் அருவியை வனத்துறையினர் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்து வருகிறார்கள்.
தமிழக அரசு தமிழகம் முழுவதும் சுற்றுலா தலங்களை பராமரித்து, பல்வேறு புதிய புதிய சுற்றுலா தலங்களை உருவாக்கி வரும் நிலையில் ஆண்டாண்டு காலமாக சுற்றுலா பயணிகளை கவர்ந்து வரும் பழைய குற்றாலம் அருவியை இந்த வனத்துறையினர் திட்டமிட்டு அழிக்கும் முயற்சி செய்து வருகிறார்கள்.
வனத்துறையின் இந்த செயல் பழைய குற்றாலம் அருவியை சுற்றுலா தலத்தை இருட்டடிப்பு செய்வதோடு பழையகுற்றாலத்தில் வாகனநுழைவு கட்டணம், சாலயோர குத்தகை மூலம் அரசுக்கு பல லட்சக்கணக்கான ரூபாய் வருமானத்தையும் கெடுக்க முயற்சி செய்கிறார்கள்.
இதனால் பெருந்தொகைக்கு வாகன நுழைவுகட்டணம் மற்றும் சாலையோர குத்தகை ஏலம் எடுத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
மேலும் இந்த பழைய குற்றாலம் அருவியை நம்பி வாழும் பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழலையும் ஏற்பட்டு வருகிறது எனவே தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர், தென்காசி சட்டமன்ற உறுப்பினர், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர், தமிழக முதலமைச்சராகியோர் இந்த பிரச்சனைகள் தலையிட்டு பெருந்தலைவர் காமராஜரால் உருவாக்கப்பட்ட சிறந்த சுற்றுலாத் தலமான பழைய குற்றாலம் அருவியை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளித்து மகிழ உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் பழைய குற்றாலத்தில் வனத்துறையின் அத்துமீறலை தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.