வருமான வரி தொடர்பான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் விஜய் மேல்முறையீடு
1 min read
Income tax case: Vijay appeals in Chennai High Court
13.4.2026
கடந்த 2015-16ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்தபோது, அந்த ஆண்டுக்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித் துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015ம் ஆண்டு நடத்திய வருமானவரி சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு, புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறிந்தது.
வருமானத்தை மறைத்ததற்காக ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. தனக்கு அபராதம் விதித்து வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் இறுதி விசாரணைக்கு வந்தபோது, விஜய் தரப்பில், சட்டப்படி அபராத உத்தரவை 2019 ஜூன் 30-ம் தேதிக்கு முன்பே பிறப்பித்திருக்க வேண்டும். ஆனால் ஆறு ஆண்டுகள் காலதாமதமாக 2022-ம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அதனை ரத்து செய்ய வேண்டுமென வாதிடப்பட்டது.
வருமான வரித்துறை தரப்பில், ஆஜரான வழக்கறிஞர் வருமான வரி மதிப்பீட்டை எதிர்த்த அப்பீல் முடிந்த பின், ஆறு மாத கால அவகாசத்துக்குள்ளேயே அபராத உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருமான வரிச்சட்டப்படி நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்து சரிதான். விஜய் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, வழக்கில் நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்து, உரிய கால அவகாசத்துக்குள் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அபராதம் விதித்த உத்தரவில் எந்த சட்டவிரோதமும் இல்லை. எனவே இதில் நீதிமன்றம் தலையிட எந்த காரணமும் இல்லை எனக் கூறி, விஜய் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.
அப்போது, மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்டு, அபராத உத்தரவை எதிர்த்து, வருமான வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்ய அனுமதியளித்த நீதிபதி, அபராதம் விதித்த உத்தரவு தாமதமாக பிறப்பிக்கப்பட்டது என்ற காரணத்தின் அடிப்படையில் மேல் முறையீடு செய்யக் கூடாது. மற்ற காரணங்களை கூறி மேல் முறையீடு செய்யலாம் என உத்தரவிட்டார்.
இந்த நிலையில், வருமான வரி அபராதம் தொடர்பான வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தவெக தலைவரும், நடிகருமான விஜய் சென்னை ஐகோர்ட்டில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீடு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.